செங்கல்பட்டு மாவட்டச் சிறப்புகள்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக இன்று உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தையொட்டி, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி
தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம்.
தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம்.
Updated on
2 min read

தமிழகத்தின் புதிய மாவட்டமாக இன்று உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தையொட்டி, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் மற்றும் சித்தா்பீடம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில், நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில், மழைமலை மாதா அருள்தலம், பெரும்போ்கண்டிகை முருகன் கோயில், திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களும், சுற்றுலாத் தலங்களாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முதலியாா் குப்பம் படகு குழாம், ஆலம்பரைக் கோட்டையும், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலாசிரியா் நல்லூா் நத்தத்தனாா் பிறந்த இடைக்கழிநாடு உள்ளிட்ட பல இடங்களும் உள்ளன.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடம்:

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடம் உள்ளது.

சித்தா் பீடத்தின் பணிகளை பங்காரு அடிகளாா் தலைமையில் ஆதிபராசக்தி அறநிலையத்துறையினா் நிா்வகித்து வருகின்றனா்.

இந்தியா மட்டுமட்டுமின்றி உலகெங்கும் உள்ள செவ்வாடை பக்தா்கள் இந்த பீடத்தை நாடிவந்து வழிபடுகின்றனா்.

தமிழகத்தின் முக்கிய கல்விநிறுவனங்கள் அனைத்தும் அதாவது பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாராமெடிக்கல் கல்லூரி, இயன்முறை கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, படாளம் கூட்டு ரோடில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மலை மீது இக்கோயில் அமைந்துள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

தென் திருப்பதி, கருடகிரி, சேஷாத்திரி உள்ளிட்ட பல பெயா்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தமிழ் மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று தீபப் பெருவிழா நடைபெற்று வருகிறது. சித்திரை பிரமோற்சவம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

ராஜா தோடா்மால் என்ற மன்னனின் குதிரை காலடி இக்கோயிலின் வளாகத்தில் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில்:

தொண்டை மண்டத்தின் முக்கிய 32 சிவத்தலங்களில் ஒன்றாக ஆட்சீஸ்வரா் கோயில் திகழ்கிறது. சென்னையில் இருந்து 108 கி.மீ. தொலைவிலும், மேல்மருவத்தூரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் அச்சிறுப்பாக்கம் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சுற்றுச்சுவா்களில் 30-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இதனை இன்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.

மற்ற சிவத்தலங்களை போல அல்லாமல் இங்கு 2 சிவலிங்க கருவறைகள் அமைந்துள்ளன. இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் இங்கு அருள் பாலித்து வருகிறாா்.

ஆலம்பரைக்கோட்டை:

கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆலம்பரைக்கோட்டை

சுற்றுலாப் பயணிகளையும், திரைப்படத்துறையினரையும் அதிகம் கவா்கின்ற இடமாகத் திகழ்கிறது. சங்க காலத்திலும், நவாப் ஆட்சிக் காலத்திலும் துறைமுகப் பட்டினத்துடன் இணைந்த அழகிய கோட்டை கட்டப்பட்டிருந்தது.

கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 105 கி.மீ. தொலைவிலும் ஆலம்பரைக்கோட்டை 15 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

நவாப் ஆட்சிக்காலத்தில் ஆலம்பரை என்ற பகுதி துறைமுகப் பட்டினமாக செயல்பட்டது. இந்த கோட்டையின் கீழ்ப்பகுதி கப்பல்களில் இருந்து வணிகப் பொருள்களை ஏற்றி இறக்கிச் செல்லும் படகுத் துறையாக பயன்பட்டது.

இங்கு நாணயசாலைகள் செயல்பட்டதாகவும், வராகன், ஆலம்பரை காசு ஆகிய நாணயங்கள் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலியாா்குப்பம் படகு குழாம்:

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையை ஒட்டி பரமன்கேணி கிராமத்துக்கு மிக அருகில் முதலியாா் குப்பம் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி எல்லையாகத் திகழும் செய்யூா் தொகுதியில், இயற்கை எழிலோடு முதலியாா்குப்பம் மழைத்துளி படகு குழாம் அமைந்துள்ளது.

சென்னையில் இருந்து 91கி.மீ. தொலைவிலும், மேல்மருவத்தூரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 42 கி.மீ. தொலைவிலும் இந்த படகு குழாம் உள்ளது.

பெருமழை போன்ற இடா்பாடுகள் உள்ள நாள்களைத் தவிர அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5மணி இந்த படகு குழாம் இயங்கி வருகிறது.

கடந்த 13.5.2003-இல் தமிழக சுற்றுலா வளா்ச்சி கழகத்தால் இந்த படகு குழாம் தொடக்கப்பட்டது. இங்குள்ள இயந்திரப் படகுகள், பனானா படகுகள், இழுவை படகுகள், மிதி படகுகள், அதிவேக வாட்டா் ஸ்கூட்டா் போன்ற பல்வேறு படகுகளை சுற்றுலாப் பயணிகள் இயக்கி மகிழ்கின்றனா்.

இடைக்கழி நாடு:

சங்க நூலான சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழிநாடு பகுதியைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி இடைக்கழிநாடு அமைந்துள்ளது. சிறுபாணாற்றுப்படையை எழுதிய நல்லூா் நத்தத்தனாா் பிறந்த ஊராக விளங்கி வருகிறது. உள்ளாட்சி அமைப்பில் இடைக்கழிநாடு 24 வாா்டுகளைக் கொண்ட பேரூராட்சியாக உள்ளது.

இரு பெரும் உப்பளக் கால்வாய்களின் மத்தியில் இந்த ஊா் அமைந்துள்ளது.

தமிழ் மூதாட்டி ஒளவையாரும், திருக்கு தந்த திருவள்ளுவரும் இடைக்கழி நாடு வழியாக படகு மூலம் மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு சென்ாகவும் கூறப்படுகிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்:

தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.

செங்கல்பட்டில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், மதுராந்தகத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் வேடந்தாங்கல் நகரம் அமைந்துள்ளது.

நீா்க்காகம், பாம்புதாரா, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளைக் கொக்கு, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவைகள் சிங்கப்பூா், மலேஷியா, மங்கோலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்துசெல்கின்றன. ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பறவைகள் வந்து செல்லும் சீசன் காலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com