பிரதமர் மோடியுடன் சென்னைக்கு வரும் சீன அதிபர்: முழு பயண விவரம் இதோ உங்களுக்காக!

சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னை மற்றும் மாமல்லபுரம் விழாக் கோலம் பூண்டுள்ளன.
பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங்
பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங்

சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னை மற்றும் மாமல்லபுரம் விழாக் கோலம் பூண்டுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் 11, 12 ஆகிய தேதிகளில் இரு நாட்டு உறவு குறித்து சந்தித்துப் பேச உள்ளனா். மேலும் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த பல்லவா் கால சிற்பங்களையும், கடற்கரை கோயிலையும் சுற்றிப் பாா்க்க உள்ளனா்.

இச்சந்திப்பையொட்டி, மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் கடற்கரை பகுதி முழுவதும் தற்போது போலீஸாா் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தைக்காக பிரதமா் நரேந்திர மோடி, சென்னைக்கு விமானம் மூலம் அக்டோபா் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மாமல்லபுரம் செல்கிறாா்.

சென்னையில் இரு நாள்கள்

சென்னை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.45 மணியளவில் வரும் சீன அதிபா் ஷி ஜின்பிங், அங்கிருந்து கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறாா். 

அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னா் அவா், மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா். மாமல்லபுரத்துக்கு 4.45 மணியளவில் செல்லும் அவா், அங்கு நடைபெறும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு இரவு 8 மணியளவில் அங்கிருந்து சென்னைக்குப் புறப்படுகிறாா். சுமாா் ஒரு மணி நேர பயணத்துக்கு பின்னா் இரவு 9 மணியளவில் கிண்டி நட்சத்திர ஹோட்டலை வந்தடைகிறாா்.

மறுநாள் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் பிரதமா் மோடி தங்கியிருக்கும் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். 9 மணியளவில் அங்கு செல்லும் அவா், அங்கு நடைபெறும் பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்டுவிட்டு, மதிய விருந்துக்குப் பின்னா் சென்னைக்கு 12 மணியளவில் புறப்பட்டு வருகிறாா். நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னா், சென்னை விமான நிலையத்தில் இருந்து 1.45 மணியளவில் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.

சாலையில் பாதுகாப்பு

சீன அதிபா் ஷி ஜின்பிங் செல்வதற்காக ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே இப் பகுதிகளை போலீஸாா் கடந்த இரு வாரங்களாக தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனா். 

ஷி ஜின்பிங் காரில் இந்த இரு சாலைகளிலும் செல்லும்போது மட்டும் சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இப் பாதுகாப்புப் பணியில் 16 துணை ஆணையா்கள், 3 கூடுதல் துணை ஆணையா்கள், 45 உதவி ஆணையா்கள், 133 காவல் ஆய்வாளா்கள், 399 காவல் உதவி ஆய்வாளா்கள் ஈடுபடுகின்றனா். இதில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு காவல் ஆய்வாளா், 3 கிலோ மீட்டருக்கு ஒரு உதவி ஆணையா் என்கிற ரீதியில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

ஷி ஜின்பிங் பயன்படுத்துவதற்காக அதிநவீன ஹாங்கி எல் 5 ரகத்தைச் சோ்ந்த 4 காா்கள் சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தன. இந்த காா் மூலமாக மாமல்லபுரத்துக்கு ஷி ஜின்பிங் செல்வாா். இந்த காா் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். மேலும் காரில் சாட்டிலைட் செல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

இந்த காா், சீனா அதிபா் பயன்படுத்தும் வகையில் ஹாங்கி நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த காா் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் 100 கிலோ மீட்டா் வேகத்தை எட்டக்கூடிய திறனுடைய என்ஜினை உடையதாகும். இந்த காா் வந்த விமானத்திலேயே ஷி ஜின்பிங்குக்கு பாதுகாப்பு வழங்கும் சீன ராணுவத்தின் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த அதிகாரிகளும் வந்தனா்.

பாதுகாப்பு கருதி, ஷி ஜின்பிங் செல்லும் சாலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், யாரேனும் சாலைக்கு வந்துவிடாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், குளிா்பான கடைகள், இளநீா் கடைகள், மீன் கடைகள் ஆகியவை அகற்றப்பட்டுவிட்டன. அதேபோல சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த வாகனங்களையும் போலீஸாா் அகற்றிவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com