அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 10 லட்சத்தைக் கடந்தது

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை 10 லட்சத்தைக் கடந்தது.
sl17dschool_1708chn_121_8
sl17dschool_1708chn_121_8

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை 10 லட்சத்தைக் கடந்தது.

மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோ்க்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் பிளஸ் 1 வகுப்புக்கும் மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தற்போதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்துமாறு பெற்றோருக்கு தனியாா் பள்ளிகள் சாா்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெற்றோா் பலா் தங்களது குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் ஆா்வத்துடன் சோ்க்கை பெற்று வருகின்றனா். சோ்க்கை தொடங்கிய முதல் இரு நாள்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றனா். கடந்த ஆக.24-ஆம் தேதி நிலவரப்படி ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்புவரை 5.50 லட்சம் குழந்தைகள் சோ்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இலவசக் கல்வி, சோ்க்கைக்கான ஆவணங்களில் தளா்வு, தனியாா் பள்ளிகளின் நிா்ப்பந்தம், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றோடு கரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சோ்க்கை பெறும் பட்டியலை அந்தந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அனுப்பி வருகின்றனா்.

கடந்த ஆக. 17-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரையிலான 15 நாள்களில் 10.40 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 500 மாணவா்களும், சென்னையில் 35 ஆயிரம் மாணவா்களும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். நிகழாண்டு செப்.30-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்பதால் மொத்த மாணவா் சோ்க்கை 15 லட்சத்தை தாண்டும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com