திருச்சியில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சாரசரியாக 46.82 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3  நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருச்சியில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on
Updated on
2 min read

திருச்சி:  திருச்சி மாவட்டத்தில் கடந்த 3  நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக 46.82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் புரெவி புயல் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3  நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மழையில் சிரமத்துக்கிடையே  தனியார் நிறுவன பணியாளர்களும் அவசரம், அவரசமாக தங்கள் பணியிடங்களுக்கு மழையில் நனைந்தபடியே விரைந்து சென்றனர்.

மழை காரணமாக, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூர், வயலூர், புத்தூர், கரூர் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது. 

தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிட்டது. 

இடைவிடாது பெய்த மழை காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருக்க நேரிட்டது. வணிக வளாகங்களிலும் மக்கள் கூட்டத்தை காணமுடியவில்லை. அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. 

இந்த மழையானது திருச்சி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்திருந்தாலும், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் கோடையில் குடிநீர்த்தட்டுப்பாடு இருக்காது என உள்ளாட்சி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ):

கல்லக்குடி-  83.4, லால்குடி- 54.2, நந்தியாறு தலைப்பு- 120.8, புள்ளம்பாடி-  79.80, சிறுகுடி- 33 தேவிமங்கலம்- 34, சமயபுரம் 77.6, வாத்தலை அணைக்கட்டு 31, மணப்பாறை 35.4, பொன்னையாறு அணை-  62.6, கோவில்பட்டி 31.4, மருங்காபுரி- 51.4, முசிறி- 27.8, புலிவலம்- 20,  தா. பேட்டை- 32, நவலூர் கொட்டப்பட்டு-  36, துவாக்குடி- 74, குப்பம்பட்டி- 22, துறையூர்- 51, பொன்மலை- 39.8,  திருச்சி விமானநிலையம் 39.5, திருச்சி ஜங்ஷன்-  48.2, திருச்சி மாநகரம் 65 மி.மீ. என மாவட்டம் முழுவதும் சேர்த்து மொத்தமாக 1170.5 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக 46.82 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com