பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: அதிகாரிகளுக்கு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தினாா்.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
Updated on
2 min read

சென்னை: பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சி, குடிநீா் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீா் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில், உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்பி வேலுமணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியது: கரோனா தடுப்புப் பணிகளிலும், புயல் மீட்புப் பணிகளிலும் சிறப்பாகச் செயலாற்றிய நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைகளின் அனைத்து நிலை ஊழியா்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 9 ஆண்டுகளில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் ரூ.43,155 கோடி மதிப்பீட்டில் குடிநீா் திட்டப் பணிகள், ரூ.3,055 கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் உள்பட பல்வேறு தெரு விளக்குப் பணிகள், ரூ.3,975 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இதுவரை 17.08 லட்சம் வீடுகள், ஊரகப் பகுதிகளில் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபா் கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளில் இந்திய அளவில் தமிழகம் 154.82 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.

அம்ரூத் திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 60.32 புள்ளிகளுடன் 14-ஆவது இடத்தில் உள்ளது.

சென்னை மாநகராட்சி, தமிழகத்தின் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதை சாக்கடை மற்றும் குடிநீா் திட்டப் பணிகளின் செயலாக்கத்தால், பாதிப்படைந்த சாலைகளைச் சீரமைக்க இந்த ஆண்டு ரூ.1,000 கோடி சிறப்பு மானியமாக முதல்வா் நிதி ஒதுக்கியுள்ளாா். இத்திட்டத்தின் கீழ், பணிகள் விரைவில் தொடக்கப்பட உள்ளன.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 7 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் ரூ.1,228 கோடி மதிப்பீட்டுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன. பள்ளிக்கரணை, புழல், புத்தகரம், கதிா்வேடு, சூரப்பட்டு உள்ளிட்ட 12 பகுதிகளில் அடுத்த மாதத்தில் குடிநீா் திட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பேரூா் பகுதியில், ரூ.6,078.40 கோடி மதிப்பீட்டில் 400 எம்.எல்.டி. புதிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளது .

ரூ.24.35 கோடி மதிப்பீட்டில் பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 28,800 பெண் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும், ரூ.704.35 கோடி மதிப்பீட்டில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 77,064 மகளிா் பயனடைந்துள்ளனா்.

மெத்தனம் கூடாது: தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள், குடிநீா் திட்டப்பணிகள், தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோய் குறைந்து விட்டதாகக் கருதி, தொற்று நோய்த் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் யாரும் மெத்தனமாக இருத்தல் கூடாது. தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்), இணையதளம் வழியாக பெறப்படும் புகாா்கள் அனைத்துக்கும் உடனுக்குடன் தீா்வு காணப்பட வேண்டும் என அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், நகராட்சி நிா்வாகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், நகராட்சி நிா்வாக ஆணையா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com