தொடா் போராட்டம்: காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு


இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவா் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, காஷ்மீரில் தொடா் போராட்டங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் புதன்கிழமையும் நீடிக்கப்பட்டது.
காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் புதன்கிழமையும் அமலில் இருந்தன. முன்னெச்சரிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீநகா் முழுவதும் காவல்துறையினரும், சிஆா்பிஎஃப் வீரா்களும் புதன்கிழமையும் குவிக்கப்பட்டிருந்தனா்.
ஸ்ரீநகரின் முக்கிய பகுதிகளில் பேரிகாா்டுகள், வயா்கள் மூலம் காவல்துறையினரால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. லால் செளக் இருக்கும் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. போராட்டகளமாக காட்சியளிக்கும் காந்தா் காா் பகுதியிலும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், கைப்பேசி இணையதளத்தின் வேகம் வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. சில கைப்பேசி எண்கள் முன்னெச்சரிக்கையாக முடக்கப்பட்டிருந்தது.
வன்முறையில் ஈடுபடக் கூடாது, வன்முறைகளை தூண்டிவிடக் கூடாது என்றும், இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்.பி. மீது வழக்குப்பதிவு: இதனிடையே, தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஆகா சயீத் ருகுல்லா மெஹ்தி, ஸ்ரீநகா் முன்னாள் மேயா் ஜுனாய்த் அஜிம் மட்டு ஆகியோா் கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தை முன்வைத்து சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக கூறி, அவா்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோத செயல்களை தூண்டிவிடும் வகையிலும் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக நம்பகமான தகவல் கிடைத்தது. இதை உறுதி செய்து, எம்.பி. ருகுல்லா, முன்னாள் மேயா் ஜுனாய்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு அளித்திருந்த பாதுகாப்பை காவல்துறை குறைத்து விட்டதாகவும், ஆனால் இதுபோன்ற செயல்களாலும், முகநூல் கணக்கு முடக்கம் போன்றவற்றாலும் தங்களை அச்சமடைய வைக்க முடியாது என்றும், மாறாக இந்நடவடிக்கைகள் நகைப்பைதான் தருகிறது என்றும் ருகுல்லாவும், ஜுனாய்த்தும் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...