
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த ஐந்து குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
மன்னார்குடி அருகேயுள்ள மூன்றாம் சேத்தி கிராமத்தில் லாரிகளில் வாத்துகளை கொண்டுவந்து 15க்கும் மேற்பட்டவர்கள் அக்கிராமத்தில் தங்கியிருந்தனர்.
இவர்களுடன் 5 வயதுக்கு மேற்பட்ட 14 வயதுக்கு உட்பட்ட ஐந்து குழந்தைகளும் தங்கியிருந்தனர். இவர்கள் 5 பேரும், அவர்களது குடும்பத்துடன் தங்கி இருப்பதாக கிராமத்தினர் நினைத்திருந்த நிலையில். குழந்தைகளை, அவர்கள் நடத்திய விதம் பார்த்து சந்தேகப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இவர்களை பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் செல்வராஜ், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.புண்ணியகோடி மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்த போது, வாத்து மேய்ப்பவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு , காவல் துறையினர் உதவியுடன் அழைத்துச் வந்து மேல் விசாரணை செய்தனர்.
குழந்தைகள் 5 பேரில் இருவர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும் இரண்டு பேர் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு சிறுவன் பெங்களூர் என்பதும் இவர்கள் 5 பேரும், கொத்தடிமை தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
மீட்கப்பட்ட 5 பேரில், 4 பேர் குழந்தைகள் இல்லத்தில் முதலில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் ஒரு குழந்தை மட்டும் அவரது பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 5 பேருக்கும் அரசு நிதி தலா ரூபாய் 20 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.