தினமணி செய்தி எதிரொலி: இசைமேதை விளாத்திகுளம் நல்லப்பசாமிக்கு நினைவுத் தூண் திறப்பு

விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசாமிக்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட நினைவுத்தூண் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தினமணி செய்தி எதிரொலி: இசைமேதை விளாத்திகுளம் நல்லப்பசாமிக்கு நினைவுத் தூண் திறப்பு
Updated on
2 min read


விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசாமிக்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட நினைவுத்தூண் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் இசை மேதையாக திகழ்ந்த விளாத்திகுளம் ஸ்ரீ நல்லப்பசாமியின் நினைவை போற்றும் விதத்தில் அவருக்கு மணி மண்டபமும் இசைப்பள்ளியும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தினமணி நாளிதழ் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள இசை அன்பர்கள் கிராமிய கலைஞர்கள் விளாத்திகுளம் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவரும் இசைமேதை நல்லப்பசாமிக்கு நினைவு மணிமண்டபம் அமைத்து கௌரவிக்க வேண்டும் என கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து மக்கள் பிரதிநிதிகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசாமியின் நினைவை போற்றும் வகையில் நினைவுத்தூண் அமைக்க ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டார். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நினைவுத்தூண் கட்டுமான பணிக்கு பூமி பூஜைகள் நடைபெற்று பணிகள் தொடங்கியது. 

பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து இன்று இசைமேதை நல்லப்பசுவாமி நினைவுத்தூண் திறப்பு விழா நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இசைமேதை நல்லப்ப சுவாமியின் நினைவு ஸ்தூபியை திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் அவரது நினைவு ஸ்தூபியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லப்பசுவாமி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்யது முகம்மது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், அதிமுக நிர்வாகிகள் பால்ராஜ், நடராஜன் மற்றும் நல்லப்ப சுவாமியின் வழித்தோன்றல்கள், இசை அன்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com