மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யாராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு

எம்.ஜி.ஆர். இன்றைக்கும் அழிக்க முடியாத சக்தியாக தமிழகத்தில் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் போல மாதிரிகளை உருவாக்க வேண்டுமே தவிர, யாராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றார் அமைச

News image
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுடன் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
Updated On :6 செப்டம்பர் 2020, 9:06 am

DIN

எம்.ஜி.ஆர். இன்றைக்கும் அழிக்க முடியாத சக்தியாக தமிழகத்தில் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் போல மாதிரிகளை உருவாக்க வேண்டுமே தவிர, யாராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளர்களிடம் பேசியது:

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலில் சுய ஊரடங்கைக் கடைப்பிடித்தால்தான் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் உலக நாடுகள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தன. இந்தியாவிலும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதலில் பல்வேறு நிலைபாடுகளில் சுயஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இன்றைய காலத்தின் தேவை கருதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி, பல்வேறு வகையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்து தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விரைந்து பரிசோதனை செய்ததன் காரணமாகத்தான் பேரழிவில் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. 

இம்மாதம் 15ஆம் தேதி தமிழக முதல்வர் தூத்துக்குடி மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்திட வருகை தர உள்ளார். அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

கரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்தே அரசின் நடவடிக்கைகளை ஸ்டாலின் குற்றம் சொல்கிறாரே தவிர, ஆலோசனை கூறவில்லை. அவருக்கு யோசனை சொல்லத் தெரியாது. அவருக்கு தெரிந்தால்தானே சொல்ல முடியும்? அவருக்கு அனுபவம் இல்லை. நோய்த்தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் சொல்வதைப் போன்று இறப்பு விகிதம் அதிகளவு இல்லை.

அதிமுக தமிழகத்தின் மிகப்பெரிய சக்தி. தேர்தல் வருகின்ற நேரங்களில் டெப்பாசிட் வாங்காத கட்சிகள் கூட நாங்கள் தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வார்கள். ஒரு தொகுதியில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வாக்குகள் பெறுபவர்கள் கூட நாங்கள் தான் முதலமைச்சர் என்று சொல்லிதான் தேர்தலை சந்திப்பார்கள். அது ஒரு காமெடியாகத்தான் இருக்கும். ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது அதிமுக தான். அதிமுகவின் முதலமைச்சர் தான் ஆளப்போகிறார். அதைத்தெரிந்து தான் இன்று  அதிமுகவில் இளைஞர்கள், படித்தவர்கள் என திரளானோர் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். போல் சித்தரித்து படம் பிரசுரித்தால் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். இன்றைக்கும் அழிக்க முடியாத சக்தியாக, தமிழகத்தில் மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் யார் வந்தாலும் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி, எம்.ஜி.ஆரைப் போல என்று கூறி சுவரொட்டி அச்சிடுகிறார்கள் என்றால், அதிலே எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் தொடங்கிய இயக்கம் இன்றும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கும் அவருடைய இயக்கம் ஆட்சியில் இருக்கிறது என்றால் இன்றைக்கும் மக்கள் மனதில் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப்  போல மாதிரிகளை உருவாக்க வேண்டுமே தவிர, யாராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றார் அமைச்சர்.

முன்னதாக, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திரளானோர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். பின்னர், டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நிகழ்ச்சிகளில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சுப்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப் பாண்டியன், நகரச் செயலர் விஜயபாண்டியன், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலர் சுதா என்ற சுப்புலட்சுமி, மாணவரணி துணைத் தலைவர் செல்வகுமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் பழனிமுருகன், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.