ஸ்டாலின் பொய் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாது: முதல்வர் பழனிசாமி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகள் ஒருபோதும் தமிழக மக்களிடம் எடுபடாது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகள் ஒருபோதும் தமிழக மக்களிடம் எடுபடாது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கி தற்போது வரையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த திட்டம். அதனை தற்போது நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏழை மக்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டம், பெண்களின் மகப்பேறு கால நிதியுதவி, குழந்தை பிரசவித்தவுடன் 16 வகையான பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விதமாக கடுமையான தண்டனை வழங்க அரசு முன்மொழிவுகளை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. நான்குனேரி தொகுதியில் முதல் கட்டமாக 5 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வால் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் 6 இடம் மட்டுமே கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இடம் கிடைத்தது, எதிர்க்கட்சிகளோ, பொதுமக்களோ யாரும் எந்தவிதமான கோரிக்கையும் விடுக்காத நிலையிலும் கூட அரசு கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் பயனாக நிகழாண்டு 435 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களின் கவ்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தவும் முன்வந்துள்ளோம்.
கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்கள். ஆனால் யாருக்குமே வழங்கவில்லை. இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதுதான் திமுக. திமுக குடும்ப கட்சி. அதில் முன்பு கருணாநிதி, தற்போது மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என அவர்கள் குடும்பம்தான் முன்னிறுத்தப்படும். அதிமுக அப்படி அல்ல அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகும் வாய்ப்பு உண்டு. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த நான் முதல்வரானது போல திமுகவில் ஒருபோதும் நடக்காது.
மு.க. ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். 3 மாதத்தில் ஆட்சிக்கு வருவேன். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்கிறார். கடந்த முறை திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதெல்லாம் மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாதவரா தற்போது தீர்க்கப்போகிறார். தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சை ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்றார் அவர்.
அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் விஜயலெட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, நாராயணன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, களக்காடு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் த. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...