இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, கடும் அடக்குமுறையையும், அரச வன்முறையையும் எதிர்கொண்டு நாட்டின் நலனுக்காகத் தன்னலமின்றி அயராது போராடிய வேளாண் பெருங்குடி மக்களின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே இதனைக் கருதுகிறேன். 700 க்கும் மேலான விவசாயிகளின் உயிரீகத்தாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளினாலும் அளப்பெரும் போராட்டத்தினாலுமே இந்நாட்டின் வேளாண்மையை வணிகமாக்கிடும் இக்கொடும் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மையாகும்.