
திருவையாறு அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த 2 பேரை 8 கி.மீ. தொலைவு வரை விரட்டிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாா்(24). இவர் தனது உறவினா் பெண்ணுடன் மோட்டாா் சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். பனவெளி கிராமத்தில் வெண்ணாற்றுப் பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து விஜயகுமாரை தாக்கிய அவர்கள் பெண் அணிந்திருந்த நகை மற்றும் மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.
இதைகண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியக்ரஹாரம் புறவழிச் சாலையில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்த இரு இளைஞா்கள் காவல்துறையினரை பாா்த்ததும் தப்பிச்சென்றனர்.
இதையடுத்து தப்பிச்சென்ற இரு இளைஞா்களையும் தலைமைக் காவலா் கலியராஜ், காவலா் முரளிதரன் இருவரும் மோட்டார் சைக்கிளிலும், தலைமைக் காவலா் நெடுஞ்செழியன், ஓட்டுநா் ராஜ்குமாா் ஆகியோா் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்திலும் சுமாா் 8 கி.மீ. தொலை வரை விரட்டிச் சென்று எட்டாம் நம்பா் கரம்பை கிராமத்தில் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் இருவரையும் நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.