பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உள்பட மேலும் மூவர் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 
அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம்
அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை கொது செய்து  விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ. 

பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண்  ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு அதே ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தாக்கியதாக பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணந்தார். பாலியில் வழக்கில் மணிவண்ணுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த வழக்கிலும் சேர்க்கப்பட்டார். 

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளிகள் 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடையதாக வழக்கில் கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை நேற்று விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வடுகபாளையம் கிருஷ்ணசாமி செட்டியார் மகன் அருளானந்தம் (34), இவர் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளார். பொள்ளாச்சி வடுகபாளையம் பழனிசாமி  என்பவர் பாபு  என்கிற பைக் பாபு (27),  பொள்ளாச்சி ஆட்சி பட்டி,  சங்கம்பாளையம், கற்பக விநாயகர் நகர், தங்கராஜ் மகன் ஹேரேன்பால் (29), இந்த மூன்று பேரையும் நள்ளிரவு விசாரணையின் முடிவில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.  

இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்குவதால் 3 பேரிடமும் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் தருவதாக அமையும் என்றும், மேலும் பல உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும்,  3 பேரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணை அடிப்படையில் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.
 
ஜனவரி 20 வரை நீதிமன்ற காவல்:
கூட்டு பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆளுங்கட்சியை பணிய வைக்கும் நடவடிக்கையா?
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தொடர்புடைய மூவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலராக உள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தேர்தல் இட பங்கீட்டில் பாஜக-அதிமுக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆளுங்கட்சியை நெருக்கும் நோக்கில் பாஜக இந்த கைது நடவடிக்கையை தூண்டிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com