அதிமுகவால் தான் பாஜகவுக்குத் தோல்வி: சி.வி.சண்முகத்துக்கு  ராகவன் பதில்

ஜூலை 7: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என்று   பாஜக மாநில பொதுச்செயலர் கே.டி.ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவால் தான் பாஜகவுக்குத் தோல்வி: சி.வி.சண்முகத்துக்கு  ராகவன் பதில்

விழுப்புரம்:  சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என்று   பாஜக மாநில பொதுச்செயலர் கே.டி.ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் இக்கருத்தை ராகவன் தெரிவித்துள்ளார்.

 விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குள்பட்ட மரக்காணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக ஒன்றிய செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசும்போது,

 கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம்.  பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மை வாக்குகளை முழுமையாக இழந்துவிட்டோம்.  குறிப்பாக விழுப்புரம் தொகுதியில் 20,000 சிறுபான்மையினர் வாக்குகள் உள்ள நிலையில்,  திமுக 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது என்றார்.

 இந்நிலையில், விழுப்புரத்துக்கு புதன்கிழமை வந்திருந்த பாஜக மாநில பொதுச்செயலர் ராகவனிடம்,  சி.வி.சண்முகத்தின் கருத்து குறித்து கேட்டபோது,

 கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக 303 இடங்களில் வெற்றிப்பெற்றது.  உத்தரபிரதேசம் போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கூட பாஜக அதிக வெற்றியைப்பெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 18 சதவிகித இஸ்லாமிய வாக்கு வங்கி உள்ளது.  அங்கு மீரட் போன்ற இஸ்லாமிய வாக்கு வங்கி அதிகம் இருக்கும் பெருவாரியான இடங்களில் பாஜக வேட்பாளர் தான் வெற்றிப்பெற்றுள்ளார்.

 வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினர் அதிகமாக உள்ளனர்.  அங்கு பல மாநிலங்களில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. கோவாவில் 28 சதவிகித சிறுபான்மையினர் இருக்கும் நிலையில் அங்கும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

 ஜம்முகாஷ்மீரில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் நிலையில் அங்கு பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். நாடு முழுவதும் சிறுபான்மையினர் பாஜகவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என பாஜக தொண்டர்கள் எண்ணுகின்றனர்.  கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என பாஜக நினைக்கிறது.

 தனது தோல்விக்கு பாஜகவை சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.  சி.வி.சண்முகத்தின் கருத்து கட்சித் தலைமை கருத்தா என்பதை பார்க்க வேண்டும்.  எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கும்போது பாஜக தலைமை இது குறித்து தனது எதிர்வினையை ஆற்றும்.

 உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்பது தொடர்பாக பாஜக மாநில செயற்குழுவில் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டப்பிறகு தேசிய தலைமையுடன் கலந்து ஆலோசனை நடத்தியப்பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இது தொடர்பாக மாவட்டத் தலைவர்களுக்கு சில குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ராகவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com