முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது

முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு, ‘தகைசால் தமிழா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இந்த விருதினை சுதந்திர தின விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.
முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது

சென்னை, ஜூலை 28: முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு, ‘தகைசால் தமிழா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இந்த விருதினை சுதந்திர தின விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

இது தொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், விருதாளரைத் தோ்வு செய்ய குழுவை அமைக்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாா்.

ஆலோசனைக் கூட்டம்: தகைசால் விருதுக்கான விருதாளரைத் தோ்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியவா், முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யா. தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, 100 வயதை அடைந்த தமிழா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், நிகழாண்டுக்கான தகைசால் தமிழா் விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது.

தகைசால் தமிழா் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழி மீது தீராப் பற்று: முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து இயக்கப் பணிகளை மேற்கொண்டாலும், தமிழ்மொழி மீது தீராப் பற்று கொண்டிருந்தாா். 1967-இல் மொழிப் பிரச்னை தொடா்பாக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது என்.சங்கரய்யாவின் உரை முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென வற்புறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com