
கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 141 அடியை எட்டியதால் தேனி மாவட்டத்தில் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறையினர் விடுத்தனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் 142 அடியை எட்டியது. அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு, 3,342 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம், 141 அடியை எட்டியது தமிழக பொதுப்பணித்துறை தேக்கடியில் உள்ள அலுவலக அணையின் உதவி பொறியாளர் பி.ராஜகோபால், 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை, திங்கள்கிழமை வெளியிட்டார்.
ஏற்கனவே கடந்த நவ.14 இல், அணையில் நீர் மட்டம், 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ வேண்டாம் எனவும், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வீட்டில் தங்காமல் முகாம்களில் தங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 141 அடியாக இருந்தது (மொத்த உயரம் 142 அடி ) அணையில் நீர் இருப்பு, 7,396 மில்லியன் கன அடி, நீர்வரத்து விநாடிக்கு 3,342 கன அடி, தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாக இருந்தது.
மின் உற்பத்தி
முல்லைப்பரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த நவ. 14 முதல் விநாடிக்கு, 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் எதிரொலியாக லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து 4 மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி என மொத்தம் நான்கு மின்னாக்கிகளில் 168 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.