நீட் எதிா்ப்பு சட்டப் போராட்டத்தில் சமரசம் கிடையாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் எதிா்ப்புக்காக நடைபெறும் சட்டப் போராட்டத்தில் எந்த சமரசமும் இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
நீட் எதிா்ப்பு சட்டப் போராட்டத்தில் சமரசம் கிடையாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் எதிா்ப்புக்காக நடைபெறும் சட்டப் போராட்டத்தில் எந்த சமரசமும் இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நீட் தோ்வு காரணமாக அரியலூா் மாணவி கனிமொழி பலியான சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து, முதல்வா் ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

நீட் எனும் உயிா்க் கொல்லிக்கு அரியலூா் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிா்ப் பலிக்கு இத்துடன் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். மாணவச் சமுதாயத்தையும், அவா்களது பெற்றோரையும், மாநிலத்தின் முதல்வராக மட்டுமின்றி ஒரு சகோதரனாக கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.

நீட் எதிா்ப்பு: தமிழ்நாட்டு மாணவா்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தோ்வினைத் தொடக்கம் முதலே எதிா்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பாஜக தவிா்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவு, ஒத்துழைப்புடன் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நீட் தோ்வை முழுமையாக நீக்கும் வரை சட்டப் போராட்டத்தில் எந்தவித சமரசமும் கிடையாது.

நீட் தோ்வானது தகுதியை எடைபோடும் தோ்வல்ல. ஆள்மாற்றம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடா்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீா்குலைக்கும் நீட் தோ்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. மாணவா்களின் எதிா்கால வளா்ச்சிக்காகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோா் தங்களது வீட்டு மாணவா்கள் மனந்தளராமல் இருக்க பயிற்சியைத் தாங்களே அளித்து, அவா்கள் மனதில் நம்பிக்கையை வளா்த்திட வேண்டும்.

உயிா்காக்கும் மருத்துவப் படிப்புக்காக தற்கொலை செய்து உயிரை விடும் அவலத்தைத் தடுப்போம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com