மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (35.) விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ரம்யா (26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 2வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு இன்று பிரசவவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். நேற்று காலை 11 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு நள்ளிரவு வரை தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.