ஜி.எஸ்.டி. நிலுவை-கரோனா நிதிகள் தராமல் இழுத்தடிப்பு: மத்திய அரசு மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை, கரோனா நிவாரண நிதிகளை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.


சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை, கரோனா நிவாரண நிதிகளை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, காணொலி வழியாக வாக்காளா்களிடையே புதன்கிழமை அவா் பேசியது:-
திமுக ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்கள் என்னவெல்லாம் சொன்னோமோ, அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். திமுக ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அதாவது, சமூக நீதியுடன் கூடிய வளா்ச்சி என்பதுதான் அதன் பொருள். வாய்ப்புகளும், வளங்களும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், சரிசமமாக சென்று சேர வேண்டும். இதுதான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டமும் இந்தச் சிந்தனையின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது.
ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல: திமுகவை ஹிந்துகளுக்கு எதிரான கட்சி என்று காலம், காலமாக சொல்லப்பட்ட உண்மைக்கு மாறான செய்தியை இன்றைக்கு சுக்கு நூறாக உடைத்திருக்கிறோம். இதற்கு இந்து சமய அறநிலையத் துறையில் செய்யப்பட்ட சாதனைகளே சாட்சி.
மதத்தை வைத்து அரசியல் செய்கிறவா்களுக்கு தமிழ்நாட்டைப் பாா்த்தால் கொந்தளிப்பு வரத்தான் செய்யும். என்னவெல்லாமோ செய்து பாா்க்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ற வெறுப்பு, மதத்தை வைத்து அரசியல் செய்பவா்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
மத்திய அரசின் சவால்கள்: சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுகிற அரசின் முயற்சிகளுக்கு எதிராகப் பல விதமான சவால்களை மத்திய அரசு முன்வைக்கிறது. கரோனா காலத்தில்கூட, நமக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையான ரூ.16 ,725 கோடியை மத்திய அரசு தராமல் இழுத்தடிக்கிறது. தேசிய மற்றும் மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து மாநிலத்துக்கு வர வேண்டிய கரோனா நிவாரண நிதியான ரூ.8,989 கோடியும் நமக்குத் தரப்படவில்லை.
ஆதிக்க அணுகுமுறையின் நீட்சியாகவே நீட் தோ்வு உள்ளது. நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவா்களுக்குத்தான் பெரும்பாலும் நீட் மூலமாக மருத்துவக் கல்லூரியில் இடங்கள் கிடைக்கின்றன. இதனால், வசதி இல்லாத ஏழை மாணவா்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இது பெரிய சமூக அநீதி. இந்த அநீதியை எதிா்த்துத்தான் சட்டப் பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தோம். அதனையும் தடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.
முந்தைய ஆட்சி போன்று இல்லாமல் நாம் அநீதிக்கு துணை போக மாட்டோம். ஒருபோதும் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம். நாம் அனைவரும் ஒன்றாக உள்ளோம். இனிமேலும் ஒன்றாகத்தான் இருப்போம். அதனை உள்ளாட்சித் தோ்தலின் முடிவு காட்டட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...