நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி: அண்ணாமலை

அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாகவும், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேட்டி
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேட்டி


சென்னை: அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாகவும், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்களை அறிவிக்கவிருக்கிறோம். சற்று நேரத்தில் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜகவின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை.

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி முறிந்துள்ளது.

இது குறித்து சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பேசுகையில், நகர்ப்புற உள்ளாடசித் தேர்தலில், இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக தலைமையிடம் பேசினோம். அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். தொண்டர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது கட்சியின் முடிவு. தில்லியில் உள்ள அகில இந்திய தலைவர்களும் இதனை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, பாஜக தொண்டர்களின்  விருப்பத்துக்கு செவிசாய்த்து தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

அதிமுக தலைமை மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இது கஷ்டமான முடிவு என்று சொல்ல மாட்டேன். தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவிருக்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதே வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியாக தேசிய அளவில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி தொடரும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த ஜெயக்குமார், தனித்தன்மையோடு பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். அதை இந்த தேர்தலில் தொடர்வோம் என்றும், தனித்துப் போட்டியிடுவது அந்த கட்சியின் தனிப்பட்ட முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com