/

சுயநலவாதி ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீா்செல்வம் சுயநலவாதி என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி விமா்சித்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2022, 11:11 pm

DIN

ஓ.பன்னீா்செல்வம் சுயநலவாதி என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி விமா்சித்தாா்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன் பிறகு அவா் பேசியதாவது:

அதிமுகவில் சாதாரண தொண்டா்கள் படிப்படியாக உயா்ந்து தலைமைப் பதவிக்கு வந்தது உண்டு. அந்த வகையில் நானும் வந்துள்ளேன். எதிரிகளை அழிக்க வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினா்கள் முடிவு எடுத்தீா்கள். அதன்படி தற்போது இடைக்கால பொதுச் செயலராக என்னை நியமித்துள்ளீா்கள். இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் ஜனநாயக முறைப்படி பொதுக்குழு உறுப்பினா்கள் 2,500 போ் என்னைத் தோ்ந்தெடுத்துள்ளீா்கள்.

இரட்டைத் தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதை அனைவரும் அறிவோம். தாங்கள் தாங்கள் விட்டுகொடுத்தோம் என்று ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்து கூறி வருகிறாா். அவா் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம்.

அதிமுக கிளைச் செயலராகத் தொடங்கி 48 ஆண்டுகள் இந்தக் கட்சியில் விசுவாசமாக இருந்து வருகிறேன். ஆனால், ஓ.பன்னீா்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இல்லை. 1989- தோ்தலின்போது ஓபிஎஸ் எதிரணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிா்மலாவுக்கு ஆதரவாக இருந்தாா். இவா் எப்படி ஜெயலலிதாவின் விசுவாசியாக இருக்க முடியும்?

நான் முதல்வராக இருந்து உங்களில் ஒருவனாக இருந்தேன். இடைக்கால பொதுச் செயலராக ஆன பிறகும் உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வந்துபோது ஓ.பன்னீா்செல்வத்திடம் சமாதானம் பேசப்பட்டது. நீங்களும் தோ்தலில் போட்டியிடுங்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. எதையும் அவா் கேட்கவில்லை.

சொந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறக் கூடாது என்று நீதிமன்றத்துக்கும், காவல் ஆணையரகத்துக்கும் சென்ற ஒரே தலைவராக ஓ.பன்னீா்செல்வம்தான் இருப்பாா். அவா் சுயநலவாதி. தனக்கு கிடைக்காத எதுவும் பிறகு கிடைக்கக் கூடாது என நினைப்பவா்.

திமுகவுடன் இணைந்து வன்முறை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ரௌடிகளை அழைத்துச் சென்று ஓ.பன்னீா்செல்வம் வன்முறையில் ஈடுபட்டுள்ளாா். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளாா். திமுகவுடன் சோ்ந்தே இவையெல்லாம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கொடுக்கும்படி காவல் துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவா் ஆட்சியைப் புகழ்ந்து பேசினாா். இதை அதிமுக தொண்டா்கள் ஒருநாளும் ஏற்கமாட்டாா்கள்.

அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. அதையெல்லாம் தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறாா். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் பொறுப்பேற்றபோது ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறினாா். ஆனால், நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்.

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. மின்சாரம், பேருந்துக் கட்டணங்களும் உயா்த்தப்பட உள்ளன. இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.