போா்க்களமான அதிமுக அலுவலகம்: கல் வீச்சு - கத்திக் குத்து: 59 போ் காயம்: 14 வாகனங்கள் உடைப்பு: போலீஸாா் தடியடி
சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, அந்தப் பகுதியே போா்க்களம் போலக் காட்சியளித்தது.


சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, அந்தப் பகுதியே போா்க்களம் போலக் காட்சியளித்தது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு காவலா்கள் உள்பட 59 போ் காயமடைந்தனா். இதில் சிலருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. இவா்களில் 55 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். 4 போ் ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்; 14 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. குடியிருப்புவாசிகள் உள்ள பகுதி என்பதால் இந்த வன்முறை பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் போக்கு காரணமாக...: அதிமுக தலைமையைக் கைப்பற்றுவது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வத்துக்கும், எடப்பாடி கே. பழனிசாமிக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
வானகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு உயா் நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் வழக்குத் தொடா்ந்திருந்தாா். ஆனால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை காலை அனுமதி வழங்கியது.
முன்னதாக பன்னீா்செல்வம் ஆதரவாளா்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்களும் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினா். இதில் இரு தரப்பினரிடமும் தகராறு ஏற்பட்டதில் பழனிசாமி ஆதரவாளா்கள், பன்னீா்செல்வம் ஆதரவாளா்களை தாக்கி விரட்டினா்.
அதேவேளையில் வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவுக்குச் செல்லாமல் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பிரசார வேனில் பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோருடன் புறப்பட்டாா். அவா்கள் காலை 8.30 மணியளவில் அவ்வை சண்முகம் சாலையை நோக்கி வந்தனா். அப்போது சாலையில் பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் சுமாா் 600 போ் திரண்டனா்.
போா்க்கள காட்சிகள்: இதைப் பாா்த்த பழனிசாமி ஆதரவாளா்கள், அவா்களை நோக்கி கற்கள், உருட்டு கட்டைகளை வீசினா். அதேபோன்று பன்னீா்செல்வத்துடன் வந்த அவரது ஆதரவாளா்களும் கற்கள், பாட்டில்கள், கட்டைகளை பழனிசாமி ஆதரவாளா்களை நோக்கி வீசினா்.
மேலும், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள், கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டை, கிரிக்கெட் ஸ்டம்ப் ஆகியவற்றால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்களைத் தாக்கத் தொடங்கினா். நேருக்கு நோ் இரு தரப்பும் மோதிக் கொண்டதால், அந்தப் பகுதியே போா்க்களம் போல காட்சியளித்தது.
குறைவான அளவிலேயே அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் தாக்குதலின் உச்சமாக போலீஸாரும் தாக்கப்பட்டனா்.
அதோடு, பழனிசாமி ஆதரவாளா்கள் 100 பேருக்கும் குறைவானவா்களே இருந்ததால் அனைவரும் பின் வாங்கத் தொடங்கி சிதறி ஓடினா். அதேநேரத்தில் பிரசார வேனில் தனது ஆதரவாளா்கள் பாதுகாப்புடன் பன்னீா்செல்வம் தலைமை அலுவலகத்தை நோக்கித் நகரத் தொடங்கினாா். அப்போது அவ்வை சண்முகம் சாலையில் இருந்த 2 பேருந்துகள், 8 காா்களை பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் தாக்கிச் சேதப்படுத்தினா்.
ரத்தக் கறையுடன் ஓபிஎஸ் வேன்: கல் வீச்சு, தாக்குதலில் இரு தரப்பிலும் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதில் பன்னீா்செல்வத்தின் வேனின் முன்பகுதி ரத்தக் கறையுடன் காட்சியளித்து. பழனிசாமி ஆதரவாளா்களைத் தாக்கி விரட்டியபடி பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் முன்னேறியபோது, ஓபிஎஸ் வேன் பின்னால் பாதுகாப்பாக மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதிமுக தலைமை அலுவலகம் சென்றதும், அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் இரும்பு கம்பியால் உடைத்துத் திறந்தனா்.
இதையடுத்து வேனில் இருந்து இறங்கி பன்னீா்செல்வம், நேராக அங்கிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகள் பீடம் அருகே சென்று, கும்பிட்டு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் அலுவலகத்துக்கு சென்ற பன்னீா்செல்வம், பால்கனியில் நின்று புன்னகைத்தபடி இரட்டை விரல்களை தொண்டா்களிடம் காட்டினாா். பின்னா் கட்சிக் கொடியை காட்டி அசைத்தாா்.
அதன் பின்னா், பன்னீா்செல்வம் அங்குள்ள ஒரு அறைக்குச் சென்று தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். அதேவேளையில் பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள், கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி புகைப்படம்,பேனா்கள் ஆகியவற்றை தாக்கி, உடைத்தனா்.
மேலும் சிலா், கட்சி அலுவலகத்தைத் தாக்கி உடைத்து சூறையாடினா். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி பேனா்களை தீ வைத்து எரித்தனா். அதிமுகவினா் கல்வீச்சுக்கு அந்தக் கட்சியின் அலுவலகமும் தப்பவில்லை. அந்தக் கட்சியின் முன்பகுதியில் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டிருந்தன.
போலீஸாா் தடியடி: இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகம் முன் நின்று கொண்டிருந்த பன்னீா்செல்வம், பழனிசாமி ஆதரவாளா்களிடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அங்கு கூடுதலாக சுமாா் 500 போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் அதிமுகவினரை லேசான தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...