உதகை மலர்க்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
உதகை மலர்க்காட்சியில் என்னங்க ஸ்பெஷல்?
உதகை மலர்க்காட்சியில் என்னங்க ஸ்பெஷல்?

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பொதுவாக ஒரு மலரைப் பார்ப்பதே அழகு. அதுவே பூங்கா முழுக்க மலர்கள், வண்ண வண்ண, வாசம் வீசும் மலர்கள் என்றால் மகிழ்ச்சிக்கும் குதூகலத்துக்கும் சொல்லவா வேண்டும்?

கோடை விடுமுறையில் பெரும்பாலான மக்களின் இனிய தேர்வாக இருப்பது உதகைதான். அங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர்க்காட்சி திறக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20.5.2022) நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.

கோடை காலத்தில் நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோடை விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட உதகை மலர்க்காட்சி திடலில் வண்ண மலர்களான டுலீப், சிம்பிடியம், புரோட்டியா, கேலா லில்லி மற்றும் மேரிகோல்ட் உள்ளிட்ட 275 வகை ரகங்கள் அடங்கிய வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் சுமாா் 1 லட்சம் காரனேஷன் மலா்களைக் கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

மலர்க்காட்சி மாடத்திலுள்ள கொய்மலர்கள் அரங்கினையும், ஹெலிகோனியா மலர் அலங்காரங்களையும், ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப் மலர் செடிகளையும், சுமார் 52 வகையான மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் மாடங்களையும், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், காட்டெருமை உள்ளிட்ட பிற அலங்காரங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த விருப்பத்தை ஏற்படுத்தும்.

மேலும், குழந்தைகள், சுற்றுலாப்பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சுமார் 4,500 தொட்டிச் செடிகளின் மூலம் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி மாளிகையினையும், நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி பெருமக்களான தோடர், இருளர், குரும்பர், பணியர், கோத்தர் மற்றும் காட்டு நாயக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தினையும், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, ஆந்தை, சுமார் ஒரு இலட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக மலர் அலங்காரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டடம் கண்ணை கவர்கிறது.

உதகை 200-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை நினைவு கூறும் விதமாக “Ooty 200” என்று மலர்களால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதையும், மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள “மீண்டும் மஞ்சப்பை” அலங்காரத்தையும், சுற்றுச்சூழல் துறையின் சார்பில் பிளாஸ்டிகிற்கு மாற்றாக “மீண்டும் மஞ்சப்பை” பயன்பாடு குறித்து அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அரங்கு மற்றும் தனியார் அரங்குகளும் பார்த்து மகிழ உகந்த விஷயங்கள்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறையின் காட்சித் திடல்களை பார்க்க மறந்துவிட வேண்டாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com