மழை வரும் வரை இப்படியே ஓட்ட வேண்டியதுதான்: தமிழ்நாடு வெதர்மேன்

திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் உள்பட பலரும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் உள்பட பலரும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை.

இந்த நல்வாய்ப்பை சும்மா விடுவார்களா மீம்ஸ் கிரியேட்டர்கள். வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு வெதர்மேன், எச்சரிக்கை எச்சரிக்கை என பிரேக்கிங் செய்தி போட்ட ஊடகங்கள் எல்லாவற்றையும் வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற ஒரு மீம்ஸை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, கனமழை என்று ஓவரா கூவுன நாங்க எல்லாம் தள்ளு தள்ளு என சென்னை நோக்கி மேகக் கூட்டங்களை தள்ளிக் கொண்டிருக்கிறோம். மழை வரும் வரை இப்படியே  மீம்ஸ் போட்டு தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

மேலும், கிண்டலை எல்லாம் தாண்டி, மிக அடர்த்தியான மேகக் கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் மழை பெய்து ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ.20) முதல் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
பின்னா், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மிக பலத்த மழைக்கான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இதுபோலவே, திங்கள்கிழமையும் கனமழை பெய்யும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கை செய்திகள் வெளியான நிலையில், இன்றும் தொடர்ந்து சிறு தூறல் விழுந்தபடியே வானம் காத்திருக்கிறது. இருக்கலாம்.. இன்று இரவு நல்ல மழை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com