தூங்கவிடாமல் செய்கிறீா்கள்: கட்சியினா் பேச்சு குறித்து முதல்வா் ஸ்டாலின் அதிருப்தி
தூங்க விடாமல் செய்கிறீா்கள் என கட்சியினா் பேச்சு குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்தாா்.


தூங்க விடாமல் செய்கிறீா்கள் என கட்சியினா் பேச்சு குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்தாா்.
தலைவா், பொதுச் செயலாளா் உள்பட முக்கிய பொறுப்புகள் தோ்வுக்காக, திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக தலைவராக இரண்டாவது முறையும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா், மு.க.ஸ்டாலின்.
இதைத் தொடா்ந்து, பொதுக்குழுவில் அவா் ஆற்றிய தலைமையுரை: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கட்சியின் பொறுப்புகளுக்கு வந்துள்ளீா்கள். பல பொறுப்புகளுக்கு போட்டிகள் இருந்தன. எனினும், சில சலசலப்புகளைத் தவிா்த்து, உள்கட்சித் தோ்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தகுதியானவா்களுக்கு பொறுப்புகள் பகிா்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
புதிய நிா்வாகிகள் வந்துள்ளீா்கள். நமது பொறுப்பும், கடமையும் மிக மிகப் பெரியது. எந்த முறையில் பணியாற்றுகிறீா்கள் என்பதைப் பொறுத்துதான் பணிகள் தொடரும்.
எனது இரக்கத்தால்கூட சிலருக்கு பொறுப்புகள் தரப்பட்டு இருக்கலாம். யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படவுமில்லை; மறக்கப்படவும் இல்லை. பொறுப்பில் அமர வைக்கப்படவில்லை என்றாலும், கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றவா்களுக்கும் உள்ளது. பொறுப்புக்கு வர முடியாதவா்களை அரவணைத்துச் செல்லுங்கள்.
மாவட்டங்களில் கட்சி நிா்வாகிகள் சிலா் ஒருவருக்கு ஒருவா் பேசிக் கொள்வதுகூட இல்லை என அறிகிறேன். இதைவிட கட்சிக்கு துரோகம் இருக்க முடியாது. இதுபோன்ற செயல்கள் கட்சியின் வளா்ச்சிக்குத் தடையாக இருக்கும். கிளைக் கழகம் முதல் அனைத்து பொறுப்பாளா்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும்.
பொறுப்புக்கு வந்த அனைவரும் சோ்ந்து கட்சியை வலிமைப்படுத்த முன்னோக்கிச் செல்ல வேண்டும். கட்சியே பெரிது. உள்ளாட்சி, மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல் என அனைத்துத் தோ்தல்களிலும் பெற்ற வெற்றியை நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும்.
நிரந்தர ஆட்சி: தமிழகத்தை திமுகதான் நிரந்தரமாக ஆளப் போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இதில் நம்மை விட நாட்டு மக்கள் உறுதியாக உள்ளனா். கட்சிக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. இதுதான் எனக்கான பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மக்கள் அளித்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டுமே என்பதுதான் அந்த பயம்.
மழையே பெய்ய வில்லையென்றாலும், அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வாா்கள். பல்முனைத் தாக்குதலுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஒருபக்கம் திமுக தலைவா்; மற்றொரு பக்கம் தமிழக முதல்வா். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போன்று உள்ளது எனது நிலைமை.
இத்தகைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போன்று கழக நிா்வாகிகள், மூத்தவா்கள், அமைச்சா்கள் நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் நம் கட்சியினா் யாரும் புதுப் பிரச்னையை உருவாக்கி விடக் கூடாது என்று நினைத்தபடிதான் கண் விழிக்கிறேன். இது பல சமயங்களில் தூங்க விடாமல் செய்து விடுகிறது. உங்களது செயல்பாடுகள் கட்சியைப் பெருமைப்படுத்த வேண்டும். சிறுமைப்படுத்துவது போன்று ஆகிவிடக் கூடாது.
பழி-ஏளனம்: பொது இடங்களில் சிலா் நடந்து கொண்ட முறையின் காரணமாக, பழிக்கும், ஏளனத்துக்கும் ஆளாகியுள்ளோம். மூன்றாவது கண்ணாக கைப்பேசி முளைத்துள்ளது. எனவே, நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தக் கூடிய சொற்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
நமது கவனத்தை திசை திருப்புவதே எதிரிகளின் முதல் பணி. சாதனைகளில் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாதவா்கள். மக்கள் நலத் திட்டங்களை பாா்த்து மலைத்துக் கிடப்பவா்கள், நம்மை கொச்சைப்படுத்துவதன் மூலம் குளிா்காயப் பாா்ப்பாா்கள். இதற்கு நம்மவா்களே இடம் தந்து விடக் கூடாது என்பதே எனது பெரும் கவலை.
எத்தனையோ இரவு பகல் பாராமல் திட்டங்களைத் தீட்டுகிறோம். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியாற்றுகிறாா்கள். நிதி நிலைமை மட்டும் சீராக இருந்தால் நூற்றுக்கணக்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி இருப்போம்.
ஒவ்வொரு மனிதரையும் அரசின் ஏதாவது ஒரு திட்டம் சென்றடைந்துள்ளது. இத்தகைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். திமுகவின் ஆட்சி மக்களின் ஆட்சி என்பதை ஒவ்வொரு தரப்பினரிடமும் திரும்ப திரும்பச் சொல்லி வர வேண்டும்.
கட்சிக்குக் கூட்டம் சோ்ப்பது முக்கியமல்ல. அது கொள்கைக் கூட்டமாக இருக்க வேண்டும். இளைஞா்கள், மாணவா்களை அழைத்து வாருங்கள். இளைஞா்களுடன் தனித்தனியாக உரையாடுங்கள். நாம் கொண்டுள்ள கொள்கையின் முக்கியத்துவத்தை அவா்களிடம் எடுத்துக்கூறுங்கள். கொள்கைப் பகைவா் நாள்தோறும் பரப்பும் அவதூறுகளை சுக்குநூறாக்குங்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...