புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம்: நாளை முதல் அமல்!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் கட்டாயம் என்பது நாளை செவ்வாய்க்கிழமை(நவ.1) முதல் அமலுக்கு வருகிறது.
புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம்: நாளை முதல் அமல்!


புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் கட்டாயம் என்பது நாளை செவ்வாய்க்கிழமை(நவ.1) முதல் அமலுக்கு வருகிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர் மீது கடும் நவடடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத் துறை தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் 2019 முதல் 2021 வரை 3,410 சாலை விபத்துகள் நடத்துள்ளன. புதுச்சேரியில் குறைந்த வயதுடையவா்கள் அதிகளவில் வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குகின்றனா். நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 82 போ் இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனா். இவா்களில் 63 போ் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தனா்.

புதுச்சேரியில் காவல் அதிகாரிகள், காவலா்கள், ஊா்க்காவல் படையினா், ஐஆா்பிஎன் காவலா்கள் என அனைவரும் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இருச்சக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்யும்போது இரண்டு பேருமே தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிந்து பயணம் செய்ய வேண்டும். 

4 சக்கர வாகனங்களை ஓட்டுபவா்களும், அதில் பயணிப்பவா்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 

தலைக்கவசம் அணியாதவா்களிடம் நேரடியாக ரூ.1,000 அபராதம் விதிக்கவும் புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி, முதல் முறை பிடிபட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். 2-ஆவது முறை தவறு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஓட்டு உரிமத்தை முடக்கி வைக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இருச்சக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அத்துடன் தரமான தலைகவசமும் விற்பனை செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரியில் சமீப காலமாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பொற்றோர்களின் அனுமதியுடன் சிறுவர்கள் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இதனால் வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும். வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு ஆண்டு ரத்து செய்யப்படும்.  வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயதுவரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் சிறார் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும். 

மேலும், பொதுமக்கள் தகுதியான தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது சட்டப்படி குற்றமான செயல். இரண்டு நபர்கள் மேல் இருச்சக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அக்டோபர் மாத ஆரம்பத்தில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் நிலவும் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பொதுமக்களின் நலன் கருதி நவம்பர் 1 ஆம் தேதி முதல் சில போக்குவரத்து விதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளன என புதுச்சேரி கிழக்கு-வடக்கு போக்குவரத்து எஸ்.பி மாறன் தெரிவித்தார். 

அதாவது, நேரு வீதியில் இரண்டு பக்கங்களிலும் வாகனம் நிறுத்தும் முறை தடை செய்யப்பட்டு, வரும் செவ்வாய் முதல் முன்பு இருந்ததுபோல வடக்கு பக்கம் மட்டுமே ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். 

புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையினர், சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள செஞ்சி சாலையின் குறுக்கே சேதமடைந்த கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நவ.2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலக்கட்டத்தில் புதுச்சேரி நோக்கி மகாத்மா காந்தி சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் அஜந்தா சிக்னலில் இருந்து வலதுபுறமாகத் திரும்பி அண்ணா சாலையில் சென்று 45 அடி சாலை வள்ளலார் சாலை, காமராஜர் சாலை, திருவள்ளூர் சாலை வழியாகச் செல்ல வேண்டும். இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மேற்படி சாலையை பயன்படுத்தலாம். 

எனவே, பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும், புதுச்சேரி மாநிலம் முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை(நவ.1) முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டுச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அதனை மீறி செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என எஸ்.பி மாறன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com