சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை சீரழித்த போலி இயக்குநர் கைது! சேலத்தில் பரபரப்பு!
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாக இளம்பெண்களை சீரழித்த போலி இயக்குநர் மற்றும் பெண் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாக இளம்பெண்களை சீரழித்த போலி இயக்குநர் மற்றும் பெண் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஜனனி (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) இவர் நேற்று முன்தினம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார் அதில், 'நான் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் கூறியதன் பேரில், சேலம் ஏவிஆர் ரவுண்டனா பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனிக்குச் சென்றேன். அங்கு சேலம் மாவட்டம் இடைப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல் சத்ரியன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் இந்திராநகரை சேர்ந்த ஜெயஜோதி (28) ஆகியோர் இருந்தனர்.
வேல்சத்திரியன் தன்னை இயக்குநர் எனவும், ஜெயஜோதி உதவியாளர் எனவும் கூறினர். அவர்கள் இருவரும் தாங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கேட்டனர். என்னிடம் பணம் இல்லை எனக் கூறவும் அவர்கள் அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டனர். ஆனால், அதற்கு சம்பளம் ஏதும் தரவில்லை. சில நாட்களுக்கு முன்பு என்னை ஆபாச படத்தில் நடிக்க வைப்பதாக இயக்குநர் வேல்சத்ரியன் கூறினார். உடனே வேலையை விட்டு விட்டு வந்துவிட்டேன். அப்போது எனது செல்போனை பறித்து வைத்துக்கொண் டனர். அந்த 'போனை வாங்கவும் வேலை பார்த்ததற்கு சம்பளம் பெறவும் அங்கு சென்றேன். அங்கு என்னை வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோர் மிரட்டினர். அப்போது சில இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்' என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் சுபலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக அந்த சினிமா கம்பெனிக்குச் சென்று அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பல இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை உதவியாளர் ஜெயஜோதி ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரிய வந்தது.
அந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சினிமாவில் நடிக்க வந்த இளம்பெண்களின் ஆபாசக் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள், ஆணுறை பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். அந்த வீட்டில் உள்ள அறைகளை ஆடம்பரமாக காட்ட இயக்குநர் வேல்சத்ரியன் பிரமாண்டப்படுத்தியுள்ளார். ஒரு அறையில் கேமரா, லைட்டிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குதான், இளம்பெண்களை ஆபாசமாக நிற்க வைத்து போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். மற்றொரு அறையில் கட்டில், மெத்தை போன்றவையும் இருக்கிறது. வரவேற்பறையில் சினிமா கம்பெனியின் பெயர், அலமாரியில் ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சொகுசான சோபா செட் போட்டு, அதில் அமர்ந்தபடி பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இந்த பிரமாண்டத்தை பார்த்து நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்கள் ஏமாந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
பெண்களை கிளாமராக நிற்க வைத்து படம் எடுப்பதும் பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்துள்ளார். அப்போது நடிக்கக் கற்றுக் கொடுப்பது போல் பெண்களை சீரழித்துள்ளார். சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர்.
ஜனனியை ஆரம்பத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டு, பிறகு படத்தில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளார். அவர் மறுப்பு தெரிவித்து புகார் கொடுத்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இயக்குதர் வேல்சத்ரியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
மேலும், வேல் சத்ரியன், உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசப் படம் எடுத்த குற்றம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...