வாராணசியில் பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைப்பு: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வாராணசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
வாராணசியில் பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைப்பு: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் சார்பில் உத்திரபிரதேசம் மாநிலம், வாராணசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து, நினைவு இல்லத்தினையும் அதில் அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

மகாகவி பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் ஆண்டு பிறந்தார். தாய்நாட்டின் விடுதலைக்கு உணர்ச்சிமிக்க பல பாடல்களை இயற்றினார். 17 ஆண்டுகளாக சுதேசமித்ரன், இந்திய சக்கரவர்த்தினி, பால பாரதம் போன்ற பல பத்திரிகைகள் வாயிலாக சிறந்த கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி, நாட்டு மக்களின் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்த பெருமைக்குரியவர், பெண் விடுதலை குறித்து எழுதிய பாடல்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை, தாய்மொழித் தமிழைத் தெய்வமாகப் போற்றியவர் மகாகவி பாரதியார்.

அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், முதல்வர், பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021 அன்று பாரதியின் நினைவு நாள் “மகாகவி நாள் ”-ஆக கடைப்பிடிக்கப்படும், “பாரதி இளங்கவிஞர் விருது” வழங்கப்படும், வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதனடிப்படையில், உத்திரபிரதேசம் மாநிலம், வாராணசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டினை நினைவில்லமாக மாற்றுவதற்கு, வீட்டின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வீட்டின் ஒரு பகுதி 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, அதில் அவரின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. நினைவில்லத்தில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கை குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் புனரமைக்கப்பட்டுள்ள பாரதியார் வாழ்ந்த நினைவு இல்லத்தினையும் அதில் அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதல்வர் ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், மகாகவி பாரதியார் குறித்த குறும்படத்தினை முதல்வர் பார்வையிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையில் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.  

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் முனைவர் ஜெயசீலன் ஆகியோரும் காணொலிக் காட்சி வாயிலாக உத்தரபிரதேசம் மாநிலம், வாராணசியிலிருந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு. இரா.செல்வராஜ், வாராணசி கூடுதல் ஆட்சியர் குலாப் சந்திரா, மகாகவி பாரதியாரின் தங்கை மகன் பேராசிரியர் கேதார வெங்கட கிருஷ்ணன், தங்கை மகனின் மகன் ரவிக்குமார், மகள்கள் ஆனந்த சீனிவாசன், ஜெயந்தி முரளி, கூடுதல் இயக்குநர்(மக்கள் தொடர்பு) மு.பா. அன்புச்சோழன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com