நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி(88) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.
இவர், கம்யூனிஸ சித்தாந்தங்களை உள்ளடக்கி, தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய ஏழு நாவல்களை எழுதி உள்ளார்.
இதில் 'சுரங்கம்' நாவல் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வியலை அவர்களுடன் தங்கியிருந்து நாவலாக வடித்தார்.
சின்னப்ப பாரதியின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், சிங்களம், உஷ்பேக், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, வங்காளம், மராட்டி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலக்கியப் பயணங்களுக்காக சென்று வந்துள்ளார். இலங்கை முற்போக்கு வட்டம் வழங்கிய விருது, தில்லி தமிழ்ச்சங்க விருது, கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய பொற்கிழி விருது, மறைந்த முதல்வர் மு.கருணாநிதி வழங்கிய பொற்கிழி விருது உள்பட பல்வேறு விருதுகள் தமிழ் அமைப்புகளால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல்-மோகனூர் சாலை, முல்லை நகர் பெந்தகோஸ்த் தேவாலயம் அருகில் மனைவி செல்லம்மாளுடன் வசித்து வந்த கு.சின்னப்ப பாரதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 6.10 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு பாரதி, கல்பனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
மறைந்த சின்னப்ப பாரதியின் உடல் நாமக்கல் மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட உள்ளது.
தொடர்புக்கு: 94422-64733.