‘எஸ்.பி. வேலுமணி கிரிப்டோவில் முதலீடு’: லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய எஸ்.பி.வேலுமணி வீடு
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய எஸ்.பி.வேலுமணி வீடு

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ரூ. 34 லட்சம் கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் தனது பதவிக் காலத்தில், வருமானத்தை விட ரூ.58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலுமணி மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.  

லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்திருக்கும் வழக்கில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வருமானத்தை விட 3,928%  கூடுதலாக சொத்து சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தொண்டாமுத்தூர்‌ சட்டப்பேரவை உறுப்பினர் வேலுமணி, முன்பு தமிழக அரசின்‌ உள்ளாட்சி மற்றும்‌ ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது 26.04.2016 முதல்‌ 15.03.2021 வரையிலான காலத்தில்‌ 12 நபர்களின்‌ துணையுடன்‌, கூட்டு சதி புரிந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ 58,23,97,052 அளவுக்கு சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்‌ அடிப்படையில்‌ கோவை ஊழல்‌ தடுப்பு மற்றும்‌ கண்காணிப்பு பிரிவில் அன்பரசன்‌, ஹேமலதா, சந்திரசேகர்‌, சந்திரபிரகாஷ்‌, கிருஷ்ணவேணி, சுந்தரி,  கார்த்திக்‌, விஷ்ணுவரதன்‌, சரவணகுமார்‌, ஸ்ரீ மகா கணபதி ஜீவல்லர்ஸ்‌, கான்ஸ்ட்ராமால்‌ குட்ஸ்‌ பிரைவட்‌ லிமிடெட்‌ மற்றும்‌ ஆலம்‌ கோல்டு மற்றும்‌ டயமண்ட்ஸ்‌ பிரைவட்‌ லிமிடெட்‌ மீதும்‌ குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்‌ தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள்‌ இருப்பதாக சந்தேகிக்கப்படும்‌ 59 இடங்களில்‌ (கோயம்புத்தூர்‌-42, திருப்பூர்‌ -2, சேலம்‌-4, நாமக்கல்‌ - 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர்‌-1, சென்னை - 7 மற்றும்‌ கேரள மாநிலம்‌ ஆனைகட்டி-1) ஊழல்‌ தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால்‌ இன்று (15.3.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி சோதனையில்‌ தங்க நகைகள்‌ 11.153 கிலோகிராம்‌, வெள்ளி சுமார்‌ 118.506 கிலோகிராம்‌ மற்றும்‌ ஆவணங்கள்‌ கண்டுபிடிக்கப்பட்டும்‌, கணக்கில்‌ வராத பணம்‌ ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள்‌, பல வங்கிகளின்‌ பாதுகாப்பு பெட்டக சாவிகள்‌, மடி கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள்‌ மற்றும்‌ வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள்‌ ஆகியன கைப்பற்றப்பட்டன.

மேலும்‌ சுமார்‌ ரூ. 34,00,000 அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில்‌ முதலீடு செய்திருப்பதும்‌ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையில்‌ இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com