அதிமுகவை மீட்கும் வரை ஓயமாட்டேன்: தஞ்சையில் சசிகலா பரபரப்பு பேச்சு 

நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன்.
தஞ்சையில் சசிகலா பரபரப்பு பேச்சு
தஞ்சையில் சசிகலா பரபரப்பு பேச்சு


தஞ்சாவூர்: நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிழ்ச்சியில் வி.கே. சசிகலா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். 

பின்னர், திருமண விழாவில் பேசிய அவர், கழகத் தொண்டர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான், கழகம் ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அதிமுக, உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது.  "எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம் தான், ஜெயலிலதா மறைவுக்குப் பிறகும் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த வி.கே. சசிகலா.

அப்போது எப்படி கழகம் மீண்டு எழுந்து வந்ததோ, அதே போன்று தற்போதும் புதுப்பொலிவுடன் மீண்டு எழுந்து உன்னத நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை. தொண்டர்கள் இல்லாமல் கட்சியை ஆண்டு விடலாம் என நிர்வாகிகள் நினைக்கலாம். ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள். தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு உள்ளவரை நம் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செழிப்போடு தலைநிமிரும் என எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன். கட்சியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

நாம் செல்லும் இடங்களில் எல்லாம், தொண்டர்களும், தமிழக மக்களும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா?, அது எப்போது நிகழும் என்று எதிர்பார்க்கும் இந்த சூழலில், அதனை விரைவில் நிறைவேற்றிக் காட்டுவோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நம் கழகத்தைக் மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றிட தகுந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒருங்கிணைந்து, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகரில்லா பேரியக்கமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 

இந்த சூழலில், தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். பிரச்னைகளை தீர்க்க பொறுமையோடு எதிர்கொண்டால் வெற்றியை காணமுடியும்" என்று சசிகலா கூறினார். 

குரங்கு கதை:  மேலும் குட்டி கதை ஒன்று கூறிய சசிகலா, ஷஷகுரங்கு ஒன்று மாம்பழம் ஒன்றை சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையை ஊன்றி மரமாக வளர செய்தால் நமக்கு நிறைய பழங்கள் கிடைக்கும் நம் இஷ்டத்துக்கு மாம்பழங்களை சாப்பிடலாம் என, மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீர் ஊற்றியது. சிறிது காலம் ஆகியும் அந்த இடத்தில் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவரசம், அந்த அவசர புத்திக்கொண்ட குரங்கு, மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும், மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது.

மாங்கொட்டை பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சும் விட்டது. ஆனால், மாங்கொட்டை செடியாக வளரவே இல்லை, இதனால் ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை எடுத்து துார எரிந்து விட்டு வருத்தப்பட்டது. அந்த குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும், அதன் அவசர புத்தி நியாயமானதல்ல. காலம் என்ற நியதி இல்லாமல், எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை. எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால், விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். எனவே, நாம் செயல்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், பொறுமையுடனும்,  தேவையான முயற்சியுடனும், சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சில விஷயங்களை நாம் மறந்து விட வேண்டும். அப்படி செயல்பட்டால் நம் இயக்கம் வலிமை பெறும்" என சசிகலா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com