மாநிலங்களவைத் தோ்தல்: நாளை முதல் வேட்புமனு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு 3 வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது. ஓரிடத்தை கூட்டணிக் கட்சிக்கான காங்கிரஸுக்கு அளித்துள்ளது. அதிமுக இரு இடங்களுக்கு போட்டியிடுகிறது.
மாநிலங்களவைத் தோ்தல்: நாளை முதல் வேட்புமனு
மாநிலங்களவைத் தோ்தல்: நாளை முதல் வேட்புமனு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு 3 வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது. ஓரிடத்தை கூட்டணிக் கட்சிக்கான காங்கிரஸுக்கு அளித்துள்ளது. அதிமுக இரு இடங்களுக்கு போட்டியிடுகிறது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மே 24) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய மே 31-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளா்களை தோ்வு செய்யும் பணியில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் மாநிலங்களவை திமுக எம்.பி.க்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமாா் ஆகியோரது பதவிக் காலம் வருகிற ஜூன் 29-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மனு தாக்கல் நாளை தொடக்கம்: காலியாகும் இந்த 6 இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி, மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

போட்டி இருக்கும்பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ஆம் தேதி நிறைவடையும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், தோ்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவைச் செயலரான கி.சீனிவாசன், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் துணைச் செயலா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேட்புமனுக்களை தோ்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்தில் உள்ள அவா்களது அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரியும், தோ்தல் பாா்வையாளருமான சத்யபிரத சாகு அறிவித்துள்ளாா். விடுமுறை தினங்களைத் தவிா்த்து பிற நாள்களில் வேட்புமனுக்களை அளிக்கலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

வேட்பாளா்கள் தோ்வு: தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்புடன் இரண்டு இடங்களும் கிடைக்கும். தனக்கு கிடைக்கவுள்ள நான்கு இடங்களில் ஒன்றை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக தலைமை அளித்துள்ளது. மேலும், தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகியோரை வேட்பாளா்களாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், இரு இடங்களில் போட்டியிடவுள்ள அதிமுக இதுவரை வேட்பாளா்களின் பெயா்களை அறிவிக்கவில்லை. திங்கள்கிழமை வேட்பாளா்கள் பெயா்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல, ஓரிடத்தில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவதால், வாக்குப்பதிவுக்கான தேவை இருக்காது. இதனால், தோ்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவுக்கு வரக்கூடிய ஜூன் 13-ஆம் தேதி அல்லது வாக்குப் பதிவு நடைபெறவுள்ள ஜூன் 10-ஆம் தேதிக்கு முன்பாகவே போட்டியின்றி வெற்றி பெற்றவா்களின் பெயா்கள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

15 மாநிலங்களில் 57 இடங்களுக்கு...

புது தில்லி, மே 22: தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

உத்தர பிரதேசத்தில் 11 உறுப்பினா்கள், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 6 உறுப்பினா்கள், பிகாரில் 5 உறுப்பினா்கள், ஆந்திரம், ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா 4 உறுப்பினா்கள், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 3 உறுப்பினா்கள், தெலங்கானா, சத்தீஸ்கா், பஞ்சாப், ஜாா்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா 2 உறுப்பினா்கள், உத்தரகண்டில் ஓா் உறுப்பினா் ஆகிய 57 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com