நாட்டைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் நம் நாட்டைக் காப்பற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது."
நாட்டைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



“2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் நம் நாட்டைக் காப்பற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது." “நாட்டை காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர்” என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக விவசாய அணியின் துணைச் செயலாளர் ந.நல்லசேதுபதி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

கழக விவசாய அணியின் துணைச் செயலாளராக பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நல்லசேதுபதி - ந.வாசுகி தம்பதியரின் மகன் டாக்டர் பகவத்ஜெகனுக்கும் - அன்புச் செழியன் – ஜெயசுதா தம்பதியரின் மகள் வித்யாவுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசுகிறபோது சொன்னார், இங்கு வந்திருக்கும் முதலமைச்சர் நீண்ட நேரம் பேசுவார் என்று. நான் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. செயலில்தான் நம்முடைய திறமையை காட்டுவதுண்டு - என்கிற அந்த கொள்கை உணர்வோடு இருந்து கொண்டிருப்பவன். எனவே இந்த திருமண விழாவிலும் நான் அதிகம் பேசப்போவதில்லை.

இங்கே நம்முடைய முன்னோடிகள், பெரியவர்கள், நம்முடைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் - அதேபோல வந்திருக்கும் நீங்கள் எல்லாம் மணமக்களை எப்படி எல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்களோ, அதே உணர்வோடு உங்களோடு நானும் சேர்ந்து வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த திருமணத்தை பொருத்தவரைக்கும், இது ஒரு சீர்திருத்த திருமணமாக - சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிக்கும் திருமணமாக இந்த திருமணம் நடந்தேறியிருக்கிறது.

இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறபோது, நான் மறக்காமல் தொடர்ந்து ஒரு செய்தியை சொல்வதுண்டு. அதை இங்கேயும் நான் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகும் என்று அங்கீகாரத்தை பெற முடியாத நிலையில் நடந்திருக்கிறது.

ஆனால் 1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று, பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக சட்டப்பேரவைக்கு முதல் முறையாக வந்து, அந்த பேரவையி  சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி தந்தார்கள்.

எனவே இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்திருக்கிறது.

இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல – சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணம். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் - நம்முடைய அழகு தமிழக்கு, செந்தமிழுக்கு, நம்முடைய தாய் மொழிக்கு – ‘செம்மொழி‘ என்கிற அங்கீகாரம் பெற்று தந்திருக்கிறாரே, அந்த அங்கீகாரத்தோடு – தமிழ் மொழியில் - சீர்திருத்த வகையில் - சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணம், இந்த திருமணம். எனவே அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் எல்லோரும் இன்றைக்கு மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நல்லசேதுபதி குறித்து உரையாற்றியவர்கள் எல்லாம் மிக விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

ப.சிதம்பரம் சொன்னதுபோல, சேது சீமையில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்து, நம்முடைய நல்லசேதுபதி இன்றைக்கு திமுகவில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

முதல் முதலில் 1982-ஆம் ஆண்டு, திமுக துணை அமைப்புக்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கும் இளைஞரணியில் ஒரு உறுப்பினராக பொறுப்பேற்று பணியாற்றி, 1986-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று மிக சிறப்பாக பணியாற்றி, அதை தொடர்ந்து ஒன்றியத்தின் பெருந்தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றியிருக்கிறார்.

அதற்கு பின்னால் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் போட்டியிட்ட நேரத்தில் வெற்றி பெறுகிற வாய்ப்பை இழந்தார். வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தாலும், வெற்றி - தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி, அந்த தோல்வியைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொடர்ந்து இந்த இயக்கத்திற்காக அவர் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

எனவே அந்த வகையில்தான் இப்போது தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் மாநில அமைப்பின் விவசாய அணியின் துணைச் செயலாளராக பொறுப்பேற்றுக் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, எந்த தேர்தல் வந்தாலும், அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி - சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி – நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி - இதுபோன்று மக்கள் பணியாற்றும் வகையில் நடைபெறுகிற எந்த தேர்தல் வந்தாலும், இன்னும் சொல்லப்போனால் கட்சியின் தேர்தல்களில் மாவட்டக் கழகச் செயலாளர் வரை நடைபெறும் தேர்தலாக இருந்தாலும், அதில் நான்தான் போட்டியிடுவேன். அதில் எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று உரிமையோடு கேட்பார். அவ்வாறு வரும் நேரங்களில் தலைவர் தலைமைக் கழகத்துக்கு அழைத்து, அவரை சமாதானம் செய்து திருப்தியாக அனுப்பி வைப்பார்.

எனவே தனக்கு வேண்டும் என்று உரிமையோடு போராடுவாரே தவிர, கிடைக்கவில்லை என்று சொன்னால் அதற்காக அவர் கவலைப்படாமல், இயக்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த செயல்வீரராக நம்முடைய நல்லசேதுபதி விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே அப்படிப்பட்ட நல்லசேதுபதி அவர்களின் இல்லத்தில் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, ஏதோ கழகத்தினரின் இல்லத்தில் நடைபெறும் இந்த திருமணத்தைப் பொறுத்தவரைக்கும், மணமக்களுக்கு வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நாட்டுக்கும் நல்ல நிலையில் மக்கள் வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு வந்தாக வேண்டும்.

இன்றைக்கு திமுக சார்பில், குறிப்பாக நம்முடைய கருணாநிதி நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

எனவே அந்த நூற்றாண்டு விழாவையொட்டி, நம்முடைய கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, ஒரு இலக்கு வைத்திருக்கிறோம். என்னவென்றால், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, அதையும் தாண்டி, 2024-இல் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆங்காங்கே பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்திருக்கிறோம்.

எனவே அந்த இலக்கை நாம் நிறைவேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். அதை மனதில் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 2 ஆண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று நான் சொல்வதில்லை, இது நம்முடைய ஆட்சி என்றுதான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

சட்டப்பேரவையில்கூட பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னேன். ஆட்சிக்கு வந்து இந்த 2 ஆண்டு காலத்தில் என்னென்ன பணிகள் எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம். 3-ஆம் ஆண்டை தொடங்கவிருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் எந்த அளவிற்கு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம், நிதிநிலை ஒரு கொடுமையான பற்றாக்குறை இருந்தாலும், இன்றைக்கு ஒன்றிய அரசு நமக்கு தேவையான அளவிற்கு துணை நிற்காவிட்டாலும், அதை எல்லாம் தாண்டி – அதை எல்லாம் மீறி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக – முதலிடத்திற்கு வரும் மாநிலமாக - நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு மாநிலமாக நாம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறோம், வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.

எனவே என்னென்ன உறுதிமொழிகள் தந்தோம்... பெண்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். ஆட்சிக்கு வந்தவுடன், நாம் போட்ட முதல் கையெழுத்து இதுதான். அதேபோல பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்களுக்கு அவர்களுடைய கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுவும் இன்று வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதையும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் இருந்த நிதிநிலை சூழ்நிலை, அதை எல்லாம் இன்றைக்கு முறைப்படுத்தி – வகைப்படுத்தி, அதை எல்லாம் ஓரளவுக்கு சீர் செய்து, அதற்குப் பிறகு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்திருக்கிறோம். வருகிற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று அந்த உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவிருக்கிறது என்ற அந்தச் செய்தியை சொல்லி இருக்கிறோம்.

எனவே இவ்வாறு பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல திட்டங்களைத் தீட்டி கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் மாநில உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது - மாநில உரிமைக்கு நாம் போராட வேண்டும் என்ற அந்த நிலையிலும் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.

2024-இல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பற்றி இங்கே உரையாற்றிய திருநாவுக்கரசும், நம்முடைய மாவட்டச் செயலாளரும் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய கண்ணப்பனும் தொடக்கத்தில் குறிப்பிட்டுக் காட்டினார்கள்.

உங்களுக்கு தெரியும். ஒரு காலத்தில் பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள், அரசு அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்கள் எதாவது தவறு செய்தார்கள் என்றால் தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். அது இராமநாதபுரம் மாவட்டத்திற்குத்தான் மாற்றுவார்கள். பனிஷ்மெண்ட் அது. அப்படி இருந்தது ஒரு காலம்.

அப்படிப்பட்ட நிலையில் இருந்த அந்த மாவட்டத்தை காப்பாற்ற வேண்டும் - மாற்ற வேண்டும் என்று கலைஞர் அவர்கள் முடிவு செய்து, அவர் முதலமைச்சராக இருந்தபோது - நான் துணை முதலமைச்சராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி அதற்காக நிதியை ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவ்வாறு முடிவு செய்து அதை ஒரு ஆண்டுக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டார்கள். ஆனால் 10 மாதங்களில் நிறைவேற்றிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையை நான் பொறுப்பேற்றுக் கொண்ட காரணத்தால் எனக்கும் அந்த பெருமை கிடைத்திருக்கிறது.

எனவே அப்படிப்பட்ட நிலையில் மக்களுடைய எண்ணங்களை அறிந்து, மக்கள் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் எப்படி எல்லாம் தனது கடமைகளை நிறைவேற்றி இருக்கிறாரோ, அதே வழிநின்று இன்றைக்கு உங்கள் அன்போடு, உங்கள் ஆதரவோடு ‘திராவிட மாடல்‘ ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அந்த திராவிட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் என்றைக்கும் துணைநிற்க வேண்டும். அதே நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போது தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2024-ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணிக்கு நீங்கள் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நில்லுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com