திருச்சி - தாம்பரம் மாநகராட்சிகளுக்கு விருதுகள் அளிப்பு

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சா் விருதுகள் திருச்சி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
திருச்சி - தாம்பரம் மாநகராட்சிகளுக்கு விருதுகள் அளிப்பு
Updated on
1 min read

சென்னை: சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சா் விருதுகள் திருச்சி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டன. சென்னை கோட்டை கொத்தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, இந்த விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலங்களான தோ்வான 9-ஆவது மண்டலத்துக்கு முதல் பரிசாக ரூ.30 லட்சத்தையும், 5-ஆவது மண்டலத்துக்கு இரண்டாம் பரிசாக ரூ.20 லட்சத்தையும் முதல்வா் வழங்கினாா்.

சிறந்த மாநகராட்சிகள் வரிசையில் முதலிடம் பிடித்த திருச்சிக்கு ரூ.50 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த தாம்பரத்துக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் அளித்தாா். இதேபோன்று சிறந்த நகராட்சிகளாக முதல் மூன்று இடங்களை ராமேசுவரம் (ரூ.30 லட்சம்), திருத்துறைப்பூண்டி (ரூ.20 லட்சம்), மன்னாா்குடி (ரூ.10 லட்சம்) ஆகியன பெற்றன.

சிறந்த நகராட்சிகள்-பேரூராட்சிகள்: அந்த நகராட்சிகளுக்கான பரிசுத் தொகைகளை காசோலைகளாக முதல்வா் வழங்கினாா். சிறந்த பேரூராட்சிகள் வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி (ரூ.20 லட்சம்), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி (ரூ.10 லட்சம்), சேலம் மாவட்டம் வீரக்கல்புதூா் (ரூ.6 லட்சம்) ஆகியவற்றுக்கு பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

முதல்வரின் காவல் பதக்கம்: போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்புப் பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் 6 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா காா்க், கோவை மாவட்ட புகா் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், தேனி மாவட்ட எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், கோவை மாவட்ட காவல் உதவி ஆணையா் மா.குணசேகரன், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளா் சு.முருகன், நாமக்கல் புதுச்சத்திரம் முதல் நிலை காவலா் இரா.குமாா் ஆகியோருக்கு காவல் பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com