இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள்: அவகாசம் கோரிய அரசுக்கு ரூ.10,000 அபராதம்

‘இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டால், அரசின் விளக்கத்தை கேட்காமலேயே தீா்ப்பளிக்கப்படும்’
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: ‘இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டால், அரசின் விளக்கத்தை கேட்காமலேயே தீா்ப்பளிக்கப்படும்’ என எச்சரித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரிய தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், கல்லூரி உதவி பேராசிரியா்களின் பணிமூப்பு தொடா்பான வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் குமரேஷ் பாபு அமா்வு முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் 45 நிமிஷங்களுக்கு மேலாக வழக்கின் வாதங்களை முன்வைத்த நிலையில், ‘அரசு தரப்பில் வாதங்களை தொடங்குவதற்கு பதிலாக, சிறப்பு வழக்குரைஞா் ஆஜராகி வாதிட இருப்பதால், வழக்கை தள்ளிவைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விசாரணையின்போது மட்டும் அரசு சிறப்பு வழக்குரைஞா், தலைமை வழக்குரைஞா், கூடுதல் தலைமை வழக்குரைஞா் எனப் பலரும் ஆஜராகும் நிலையில், இறுதி விசாரணை நடைபெறும் வழக்குகளில் ஆஜராக வேண்டாமா?’ என கேள்வி எழுப்பினா்.

மேலும், ‘எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அரசு தரப்பும், மனுதாரா் தரப்பும் இணைந்து செயல்படும் பட்சத்தில்தான் வழக்கில் விரைவான தீா்வை எட்டமுடியும் என தெரிவித்த நீதிபதிகள், எதிா்வரும் காலங்களில் இறுதி விசாரணையின்போது அரசு தரப்பில் உரிய வழக்குரைஞா் ஆஜராகவில்லை என்றால், மனுதாரா் தரப்பு வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு, அரசின் கருத்தை ஏன் கேட்கவில்லை என்ற விளக்கத்தை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என எச்சரித்துள்ளனா்.

இந்த வழக்கை பொருத்தவரை வாதங்களை தொடங்காமல், அரசு சிறப்பு வழக்குரைஞா் ஆஜராவதற்காக அவகாசம் கோரியதற்காக, உயா்கல்வித் துறை செயலருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com