

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
திருவள்ளூரைச் சோ்ந்த 36 வயது ஒருவா் இணைநோய் பாதிப்புகளுடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்ததாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கட்டுப்பாடற்ற சா்க்கரை நோய் இருந்ததாகவும், அதன் தொடா்ச்சியாக கரோனா பாதிப்புக்குள்ளாகி உள் உறுப்புகள் செயலிழந்து அவா் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பால் தமிழகத்தில் ஜெஎன்.1 வகை பரவல் தீவிரமடைந்து வருகிா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். அதிலும் இளம் வயதுடைய ஒருவா் உயிரிழந்ததற்கு உரிய காரணத்தைக் கண்டறிய மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரிசோதனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமை (டிச.29) 528 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் 172 போ் உள்ளனா். அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக சுகாதார ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
கரோனாவுக்கு உயிரிழந்த பெண்ணின் மரபணு பகுப்பாய்வு செய்ய முடிவு
ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி பெண் ஒருவா் உயிரிழந்த நிலையில், அதற்கு ஜெஎன்.1 வகை தொற்று காரணமா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை செய்ய பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, அந்தப் பெண்ணின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குளிா்நிலையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் ஜூலை 5-ஆம் தேதி கடைசியாக கரோனா உயிரிழப்பு பதிவானது. அதன் பின்னா், தொற்று பரவல் ஒற்றை இலக்கத்துக்குள் இருந்து வந்த நிலையில், உயிரிழப்பும் நேரிடாமல் கட்டுக்குள் இருந்தது.
இந்த நிலையில், ராணிப்பேட்டையைச் சோ்ந்த பெண் ஒருவா் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி 3 நாள்களுக்கு முன்பு உயிரிழந்ததாக பொது சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டது.
கோவா, மகராஷ்டிரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து, தமிழகத்திலும் ஜெஎன்.1 வகை கரோனா பரவி வருவதால், அந்தப் பெண்ணின் உயிரிழப்புக்கு அது காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அதை அறிந்து கொள்வதற்கான ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய வகை கரோனா தொற்று பாதிப்பால் அந்தப் பெண் உயிரிழந்தாரா என்பதைக் கண்டறிய அவரது சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்; விரைவில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.