காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 
Published on

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவருக்கு சொந்தமான விசைப்படலில் கடந்த 24-ஆம் தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து காரைக்கால் கீழகாசாக்குடியை சேர்ந்த அஞ்சப்பன் மகன் வீரகுமார் மற்றும் வெற்றிவேல், விஜேந்திரன், கார்த்திக், மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு பகுதியை சேர்ந்த அர்ச்சுனன், ராஜேந்திரன், கவி, மாணிக்கவாசகம், அறிவழகன், சுபாஷ், சஞ்ஜய் ஆகிய 11 பேர் சென்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கோடியக்கரையின் தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் சனிக்கிழமை இரவு இந்திய கடல் எல்லைப் பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கரையினர் எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி, எந்தவித விசாரணையும் நடத்தாமல், படகில் இருந்த சாதனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.  மேலும் பைப், தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டி குழாய் உள்ளிட்டவைகளால் இந்திய மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

படகில் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலைகள், ஜிபிஆர்எஸ் கருவிகள், 11 பேரின் கைப்பேசிகள், 4 பேர் அணிந்திருந்த வெள்ளி ஆபரணம் உள்ளிட்டவைகளை பிடிங்கிக்கொண்டு சென்றுள்ளனர். 

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து காரைக்கால் கீழகாசாக்குடி மீனவ கிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பகலில் காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த காரைக்கால் கடலோரக்காவல் நிலைய காவல்துறையினர், நகர காவல்துறையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக காவல்துறியினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் வீரகுமார் கூறுகையில், “இந்திய கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கடல்கொள்ளையர்கள் தாக்குதல், மறுபக்கம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் என வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். சனிக்கிழமை சம்பவத்தின்போது இலங்கை கடற்படையினர் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டனர். கடலில் மீன்பிடிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. மேலும் தொடர்ந்து இந்திய மீனவர்களை பல வழிகளில் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எனவே இது குறித்த மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகரக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com