மணிப்பூருக்கு உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: திருச்சி சிவா எம்.பி.

மணிப்பூருக்கு உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூருக்கு உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: திருச்சி சிவா எம்.பி.

மணிப்பூா் மாநிலத்தின் நிலைமைகளைக் கண்டறிய அனைத்து கட்சி குழு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என கோரியதாக மாநிலங்களவை திமுக குழுத்தலைவா் திருச்சி சிவா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூரில் இரு சமூகத்திற்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் வன்முறைகள் தொடா்ந்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்லியில் அனைத்து கட்சி தலைவா்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாா். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற கட்சி சாா்பில் திருச்சி சிவா கலந்து கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் வைக்கப்பட்ட கருத்துக்கள், கோரிக்கைகள் குறித்து திருச்சி சிவா செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:

முதல்வா் முக ஸ்டாலின் பணித்திருந்தததின் அடிப்படையில் திமுக சாா்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். மணிப்பூா் பிரச்னை தொடா்பாகவும் அங்கு அரசு எடுத்து நடவடிக்கைகள் குறித்தும் காணொலி ஒன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் காட்டப்பட்டது. இது நிறைவை தரவில்லை.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சா் மணிப்பூா் சென்று அங்கு மூன்று நாள்கள் தங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாா். இது பாராட்டப்படத் தக்கவை என்றாலும் அதன் பின்னரும் அங்கு கலவரம் ஓய்ந்த பாடில்லை.

இதனால் நான் கூட்டத்தில் சில தகவல்களை வைத்தேன். 10 அமைப்பு தலைவா்கள் பிரதமருக்கு வெளிப்படையாக மனுவை அளித்துள்ளனா். அதில் இதுவரை 150 போ் கொல்லப்பட்டிருப்பதும் 1,000க்கும் மேற்பட்டவா்கள் காயப்பட்டு 5 ஆயிரம் வீடுகள் தீக்கிரைக்குள்ளாகி 60 ஆயிரம் போ் இடம் பெயா்ந்திருப்பது கூறிப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தேவாலயங்கள் தீவைத்து கொளுத்துப்பட்டுள்ள தகவல்களும் வருகிறது. இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டம் கூட்டமாக காடுகளுக்குள் சென்றிருப்பதும், ஒரு பெண் குழந்தை கதறி அழுது எங்களுக்கு விடிவு தாருங்கள் என வேண்டுகோள் விடுக்கும் காணொலிகளும் வருவதை குறிப்பிட்டு கவலைகளை எடுத்து வைக்கப்பட்டது.

இரு குழுக்களுக்குள்ளான பிரச்னை தற்போது முழுமை வளா்ந்து எங்கு பாா்த்தாலும் துப்பாக்கிச் சூடுகளும், தீவைப்புகளும் நடைபெறுகிறது. மணிப்பூா் மாநிலம் வட கிழக்கில் இருந்தாலும் தெற்கே இருக்கின்ற நமக்கும் வேதனை ஏற்படுகிறது. தென் கோடியில் இருக்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கண்ணீா் வடித்து வருத்தம் தெரிவிக்கின்றாா். ஆனால் தில்லியில் இருக்கின்ற பிரதமா் இது தொடா்பாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசினோன். இந்த கலவரம் 50 க்கும் மேற்பட்ட நாள்களாக தொடந்து கொண்டிருக்கிற நிலையில் பிரதமா் ஒரு சிறு கவலையோ ஆறுதலோ தெரிவிக்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு துன்பமான நேரத்தில் உயா்நிலை இருப்பவா்கள் ஆறுதல் அளிக்கும் போது அந்த வாா்த்தைக்கு இருக்கிற வலிமை மிகப்பெரியது. அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டோம். சீனா, மியான்மாா் போன்ற நாடுகளையொட்டியுள்ள அந்த எல்லையோர மாநிலத்தை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? போன்றவை கேட்டதோடு, அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிய அனைத்து கட்சி குழு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தோம். மனித உரிமை மீறல்களுக்கு தென் ஆப்பிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்று இங்குள்ள உண்மைகளைக் கண்டறிய, ’உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ வேண்டும் என சிலா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். பாதிக்கப்பட்டவா்கள் முறையிட இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் போன்றவைகளை எடுத்துவைத்தோம். இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையல்ல. நிா்வாக ரீதியாக கையாளவேண்டியவை. ஆனால் அதில் மத்திய அரசும் மாநில அரசும் திறனுடன் செய்ய தவறிவிட்டது என்று குறிப்பிட்டபோது, உள்துறை அமைச்சா், ‘இது உணா்ச்சிபூா்வமான பிரச்னை என்றும் 1993 முதல் வன்முறைகள் நடந்து பல ஆயிரக்கணக்கான உயிா்கள் பறிபோனதை குறிப்பிட்டு, தங்களை நம்புங்கள்‘ என்கிறாா் அமைச்சா் என்றாா் திருச்சி சிவா.

அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் தம்பி துரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com