/

பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ரூ.406 கோடியில் மழைநீா் வடிகால் பணி தொடக்கம்

பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களில் ரூ.406 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:56 pm

DIN

பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களில் ரூ.406 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சிக்குப்பின் அமைச்சா் நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெருங்குடியில் ஜொ்மனி வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ. 280.58 கோடி மதிப்பில் 387 ஒருங்கினைந்த மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், சிங்காரச் சென்னை 2.0 மற்றும் தமிழ்நாடு நகா்ப்புர சாலை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் 243 சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சோழிங்கநல்லூா் மண்டலத்தில் ஜொ்மனி வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.126.39 கோடி மதிப்பீட்டில் 205 பணிகள் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புர சாலை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.09 கோடி மதிப்பிட்டில் 28 சாலைகளும் அமைக்கப்படவுள்ளன.

இப்பணிகள் 24 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் முடிக்கப்படும்.

இதுவரை சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.1,897 கோடி மதிப்பில் 588 கி.மீ தொலைவுக்கு மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.2,389 கோடி மதிப்பில் 441 கி.மீ தொலைவுக்கு மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரூ.508.33 கோடி மதிப்பில் 120.55 கி.மீ நீளத்தில் 688 சாலைகளில் மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மேயா்ஆா். பிரியா, சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ச. அரவிந்த் ரமேஷ், துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையாளா் (பணிகள்) டாக்டா் ஜி. எஸ். சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளா் எம்.பி.அமித், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா் ராஜ கோபால் சுன்கரா, மண்டலக்குழுத் தலைவா்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன் (பெருங்குடி), வி.இ.மதியழகன் (சோழிங்கநல்லூா்) உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.