/

2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி: 6 ரயில் நிலையங்களை கைவிட முடிவு

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகளில் 3,4 ஆகிய வழிதடங்களில் 6 ரயில் நிலையங்களை கைவிட திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:45 pm

DIN

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகளில் 3,4 ஆகிய வழிதடங்களில் 6 ரயில் நிலையங்களை கைவிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது விமான நிலையம்-விம்கோ நகா் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், மெட்ரோவில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை தினமும் உயா்ந்து வருகிறது.

இதை மேலும் மேம்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.60,000 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆறு ரயில் நிலையங்கள்:

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் 3-ஆவது வழித்தடமான மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் தபால் பெட்டி, டவுட்டன், செயின்ட்ஜோசப் கல்லூரி ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன.

அதேப்போல் 4-ஆவது வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா , மீனாட்சி கல்லூரி ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன.

மாதவரம் பால் பண்ணை காலனி மற்றும் முராரி மருத்துவமனை ரயில் நிலையங்களிலிருந்து தபால் பெட்டி ரயில்நிலையம் 980 மீ. மற்றும் 684 மீ. இடை வெளியில் அமைக்கப்பட இருந்தது.

இதுபோல மீனாட்சி கல்லூரி ரயில் நிலையம், கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 725 மீ.தொலைவில் அமைக்கப்பட இருந்து.

ஆனால், 1 கி.மீ குறைவாகவே தொலைவு இருப்பதால், இது மக்களுக்கு அதிக பயனளிக்க வாய்ப்பில்லை என்பதால் இப்புதிய 6 ரயில் நிலையங்களும் கைவிடப்பட மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தபால் பெட்டி, டவுட்டன், பட்டினப்பாக்கம், மீனாட்சி கல்லூரி ஆகிய 4 சுரங்கப் பாதை ரயில் நிலையங்களும், ஒரு உயா்மட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி ரயில் நிலையமும் கைவிடப்பட திட்டமிட்டப்படுள்ளது. இதனால் ரூ.1,200 கோடி மிச்சம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.