மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது?

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஆனால் இன்னும் தேதிகள் குறித்த அறிவிப்புகள் மட்டும் வெளியிடப்படவில்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது?

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஆனால் இன்னும் தேதிகள் குறித்த அறிவிப்புகள் மட்டும் வெளியிடப்படவில்லை.

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த தெளிவின்மை தொடரும் அதேவேளையில், டிஜிட்டல் தரவுகள் சேகரிப்பு, மேம்பட்ட புவியியல் தொழில்நுட்பம் மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை விரைவாக வெளியிடுவதற்கு வசதியாக பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2022-23ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பங்களை மறுஆய்வு செய்து அதை இறுதி செய்வது குறித்து பல்வேறு அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் ஆலோசித்து வருகின்றன.

எனினும், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயிற்சி தொடங்குவதற்கான எந்த தேதியும் அறிக்கையில் குறிப்பிடவில்லை. 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 150 வருட வரலாற்றில் முதன்முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதால் அதற்கான காலக்கெடு 30.6.2023 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. எனினும், இங்கிலாந்து, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பயிற்சிகளை கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிற நடத்தி முடித்துவிட்டதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கு ரூ.8,754.23 கோடியை மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கிவிட்டது. இந்த முன்முயற்சிகள் என்பது மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள், மாவட்டங்கள், துணை மாவட்டங்கள், கிராமங்கள், நகரப் பகுதிகள், வார்டுகள் என அனைத்தின் வரைபடங்களையும் பதிவேற்றி, எந்த ஒரு பகுதியும் விடுபட்டுவிடாமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடப்பதை உறுதி செய்ய வகை செய்வது அடங்கும். 

மேலும், இணைய அடிப்படையிலான ஒருங்கிணைக்கப்பட்ட வரைபடங்கள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளைப் பரப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ”என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இலக்கில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முன்முயற்சிப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு வரைபடங்கள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விரைவாகவும் திறமையாகவும் முடிக்க, தற்போதுள்ள கணினிக்கான ஜிஐஎஸ் மென்பொருள் புதிய பதிப்புக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, அதன் மாதிரிகளும் வாங்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து வரைபட ஒருங்கிணைப்புப் பணிகளும், அண்மைய மென்பொருளைப் பயன்படுத்தி பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சியை பணிக்குழுவினருக்கு அளித்து வருகிறார்கள்.

“மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியாளர்களுக்காக 6 லட்சத்துக்கும் அதிகமான வரைபடங்கள் சிஎம்எம்எஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன, மேலும் அவை 2022ஆம் ஆண்டின் இறுதி வரை நடத்தப்பட்ட அதிகாரவரம்பு மாற்றங்களின்படி மேலும் புதுப்பிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்” என்றும் அது கூறியது. 

இத்தனை முன்முயற்சிகளும் நடைபெற்றுவந்தாலும், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் தேதிகள் எதுவும் குறிப்பிடப்படாதது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com