சேலம் வீரகனூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - கடைக்குச் செல்லும் பாதையை உழுதுபோட்டு எதிர்ப்பு!

வீரகனூரில் அரசு மதுபான கடைக்கு செல்வதைத் தடுக்க, நிலத்தின் உரிமையாளர் டாஸ்மாக் கடைக்கு செல்லும் பாதையை உழுது போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வீரகனூரில்  டாஸ்மாக் கடைக்கு செல்வதைத் தடுக்க உழுது போடப்பட்ட வழி
வீரகனூரில் டாஸ்மாக் கடைக்கு செல்வதைத் தடுக்க உழுது போடப்பட்ட வழி

தம்மம்பட்டி: வீரகனூரில் அரசு மதுபான கடைக்கு செல்வதைத் தடுக்க, நிலத்தின் உரிமையாளர் டாஸ்மாக் கடைக்கு செல்லும் பாதையை உழுது போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே  வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட ராயர் பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை (எண்:7128) கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையானது விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி கடந்த அதிமுக ஆட்சியில்(2019) இங்கு கொண்டு வரப்பட்டது. 

இந்த டாஸ்மாக் கடை தொடங்கிய நாளிலில் இருந்தே இந்த ஆத்தூர் மெயின் ரோட்டில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் ஆங்காங்கே உள்ள விவசாய நிலப் பகுதிகளில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து போட்டுவிட்டு செல்வதாகவும், இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. ஒரு கட்டத்தில் அரசு மதுபான கடைக்கு நிலம் கொடுத்த நிலத்தின் உரிமையாளரை விவசாயிகள் வசை பாட ஆரம்பித்தனர். 

மேலும், அந்தப் பகுதி மக்கள் அவரிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான நிலத்தின் உரிமையாளரான விவசாயி செம்மலை, டாஸ்மாக் கடையை காலி செய்து கொள்ள வேண்டி முதல்வர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் நிறுவன மேலாளர் உள்ளிட்டோருக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், விவசாயி செம்மலையை சமாதானப்படுத்துவதிலேயே டாஸ்மாக் நிர்வாகம் குறியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனால் விரக்தி அடைந்த செம்மலை அரசு மதுபான கடைக்கு செல்லும் பாதையை வழிமறித்து, கடைக்குள் வாகனங்கள் செல்லாதவாறு நிலத்தை உழுது போட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். மேலும் இதன் பின்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது குடும்பத்தினருடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com