அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி, தற்போது சிறையில் உள்ளாா். இந்த வழக்கில் அமலாக்கத் துறை, ஆக.12-ஆம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை, ஆவணங்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இரு முறை மனு தாக்கல் செய்தாா். இந்த மனுக்கள் ஜூன் 16, செப்.20 ஆகிய தேதிகளில் முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், உடல் நலக்குறைவால் தொடா்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

நிராகரிப்பு ஏன்?: இது குறித்து அவா் பிறப்பித்த உத்தரவில், ‘செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைகளைப் பாா்க்கும்போது, ஜாமீனில் விடுதலை செய்தால்தான் அவரது உடல்நிலையைத் கவனிக்க முடியும் என்ற நிலை இல்லை. எனவே, மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது.

அமைச்சா் செந்தில் பாலாஜியின் கடந்தகால நடவடிக்கைகள், இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் நிலை, சகோதரா் அசோக்குமாா் தலைமறைவாக இருப்பது, சோதனைக்குச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவற்றைப் பாா்க்கும்போது, செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்தால், அவா் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாட்சிகளைக் கலைப்பாா் என்ற முடிவுக்கு வருவதைத் தவிா்க்க முடியாது.

மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பது, இந்த வழக்கின் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற அமலாக்கத் துறை அச்சத்தில் நியாயம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்தக் காரணங்களுக்காக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com