பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின்: திருச்சி சிவா எம்.பி.

இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பார்
திருச்சி சிவா எம்.பி.
திருச்சி சிவா எம்.பி.


திருநெல்வேலி: இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பார் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மத்திய மாவட்ட மருத்துவா் அணி சாா்பில் தச்சநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் பேசியது:

தமிழக மக்களுக்கு வேண்டியதை கேட்காமலேயே செய்கின்ற ஒரு நல்ல ஆட்சி நடந்து வருகிறது. திமுக மட்டுமல்லாது உலக முழுவதும் இருக்கும் தமிழர்கள் கருணாநிதியை கொண்டாடி வருகின்றனர். கருணாநிதி 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், முதல்வர் என தனது உழைப்பால் உயர்ந்தவர். அவர் எழுத்துக்கள், கடிதம், நாடகம், வசனம் என இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். 

இந்திய அரசியலைத் தீர்மானிக்கின்ற ஒற்றைத் தலைவராகவும் கருணாநிதி இருந்துள்ளார். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பிறக்கவில்லை என்றால் நமது நிலை என்னவாக இருக்கும், அவர்களால் தான் இன்று பலர் உயர்கல்வி , வேலை வாய்ப்பு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் விட்டுச் சென்ற பணியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல; வாக்குகளை பெரும் கட்சியாக மட்டுமல்ல; சரித்திர மாற்றத்தை படைத்து ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமூக நீதியை நிலைநாட்டும் இயக்கம்.

மருத்துவம் படிப்பதற்கு தற்போது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், மருத்துவத்தில் நீட் தோ்வு இப்போது உள்ளது போல முன்பு தமிழகத்தில் சம்ஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அதனை நீதிகட்சியினா் எதிா்த்து போராடி முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நீதி கட்சியை சேரும். ஹிந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக ஆக்க எடுத்த முயற்சிகளுக்கு தடையை ஏற்படுத்தியவா் முன்னாள் முதல்வா் அண்ணா. மேலும், சென்னை மகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றினாா்.

சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்படாத நிலை இருந்த காலத்தில் இதனை மாற்ற முடியவில்லை என பெரியார்  நினைத்திருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக இருந்த அண்ணா சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற சட்டத்தையும் கொண்டு வந்தார் அதோடு மட்டுமல்லாமல் இரு மொழிக் கொள்கையையும் அண்ணா சட்டமாக்கினார். இதனைத் தொடர்ந்து கருணாநிதி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதே திட்டத்தை எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார் கருணாநிதி, அந்த உணவோடு முட்டை, பழம் வழங்கினார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிய உணவுடன், காலை சிற்றுண்டியும் வழங்கி வருகிறார். இந்தியாவிற்கே இது முன்மாதிரி திட்டமாக உள்ளது. இதனை ஒரு பத்திரிகை கொச்சைப்படுத்துகிறது, வயிற்று எரிச்சலின் வெளிப்பாடுதான் இது. ஒரு நல்ல திட்டத்தை பாராட்ட மனமில்லை என்றால் சும்மா இருங்கள்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் அறிவாலயத்தின் வாயிலை உற்று நோக்குகிறது. 2024 மக்களவைத் தோ்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அப்போது பிரதமரை தோ்வு செய்யும் முக்கிய இடத்தில் மு.க. ஸ்டாலின் இருப்பார் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான டி.பி.எம் மைதீன்கான், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலை ராஜா,  மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சக்தியானத்,  மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கணேஷ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com