
தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஓராண்டு நிறைவடைந்தும் இழப்பீடு கிடைக்காததால் மாவட்ட ஆணையர் மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். இந்த மனு மீதான நடவடிக்கை இல்லாததால், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி புகழேந்தி தரப்பில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு காலதாமதம் ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், உத்தரவை அமல்படுத்தத் தாமதம் செய்த உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இழப்பீட்டுத் தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.