தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.
வெறிச்சோடி கிடக்கும் பொட்டலூரணி வாக்கு சாவடி மையம்
வெறிச்சோடி கிடக்கும் பொட்டலூரணி வாக்கு சாவடி மையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு 1100 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்த பொட்டலூரணி  கிராம மக்கள்
வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்த பொட்டலூரணி கிராம மக்கள்

இந்த கிராமத்தைச் சுற்றி 3 தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

எனவே இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த பிரச்னைக்கு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து, கிராமத்தில் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொட்டலூரணியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வாக்குசாவடிக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் வாக்களிக்க வருபவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com