
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்கு, இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பட்ஜெட் வெளியிட்ட பிங்க் புக்கில் தெரிவிக்கபட்டதால் முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள், இரட்டிப்புத் திட்டங்கள், பல்வேறு பயணிகள் வசதி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, தெற்கு ரயில்வேக்கான நிதி, இடைக்கால வரவு-செலவுத் திட்டத்துடன், 2024 - 25 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை ஒப்பிடும்போது, 976.1 கோடியிலிருந்து 301.3 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 674.8 கோடி நிதியைக் குறைப்பதன் மூலம் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் பல முக்கிய திட்டங்களின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிப்படையும்.
இதேபோல், இரட்டிப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2214.4 கோடியிலிருந்து 1928.8 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டிப்புத் திட்டங்களுக்கான நிதியில் 285.64 கோடி குறைக்கப்பட்டிருப்பது என்பது தேவையான முன்னேற்றங்களை மிகவும் மெதுவாக்கும்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக ரயில்வே திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.
நகரி-திண்டிவனம், திண்டிவனம்-ஜிஞ்சி-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புதூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர் (மகாபலிபுரம் வழியாக), மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல புதிய ரயில் பாதை திட்டங்களையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டுமானத்தில் முன்னேற்றம், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான நான்காவது வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வு தயாரித்தல், போத்தேரி மற்றும் கட்டங்குளத்தூர் ரயில் நிலையங்களில் போக்குவரத்து சுழற்சிப் பணிகள், உள்ளூர் ரயில் சேவைகளை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு 5 முதல் 7 நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்குதல் குறித்தும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.