காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நாளை நடைபெறவிருக்கிறது.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி காலமானார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா(46) கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். மகனின் இறப்பால் மிகுந்த துயரமடைந்திருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் முறையாக களமிறங்கிய திருமகன் ஈவெரா, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான நிலையில், அவரது மரணம் குடும்பத்தினரையும் உலுக்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரது வெற்றிடத்தை நிரப்ப, ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் திருமகன் வகித்து வந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க.. சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு
34 ஆண்டுகளுக்குப் பின்.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைக்குள் முதல் முறையாக நுழைந்து அரசியல் வாழ்வை வெற்றியோடு தொடங்கினார். பிறகு 1989ஆம் ஆண்டு பவானிசாகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக உறுப்பினரிடம் தோல்வியடைந்த பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
காங்கிரஸ் கட்சியில் முன்னிலை வகித்து வந்த அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர், காங்கிரஸ் மாநில தலைவர் என பல உயர் பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்து கட்சியில் முக்கிய தலைவராகவும் அரசியலில் தனக்கென ஒரு இடத்தையும் உருவாக்கி வைத்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தவர்.
அதன்பிறகு, சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் மறைவால், சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, அரசியல் வாழ்வைத் தொடங்கிய அதே புள்ளியில் அதாவது எம்எல்ஏவாகி, சட்டப்பேரவைக்குள் நுழைந்திருந்த நிலையில்தான், உடல்நலக் குறைவால் காலமானார்.