சமூகநீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை: ராமதாஸ்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, சமூகநீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜாதி வாரி விவரங்கள் வேண்டும் என்று பாமக விரும்பினால், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாஜகவை பாமகதான் வலியுறுத்த வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சா் ரகுபதி கூறியிருக்கிறாா்.
சமூகநீதியைக் காக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாமகதான் வலியுறுத்த வேண்டும் என்றால், தமிழகத்தில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்?.
சமூகநீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.
ஆனால், இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த திமுக அரசுதான் தவறிவிட்டது. பிகாா், கா்நாடகம், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்கள், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று தட்டிக் கழிக்கவில்லை.
அந்த அரசுகளே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.