பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீா்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

News image
Updated On :26 ஜூன் 2024, 8:51 pm

Din

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அத்தகைய கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்தாகும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசால் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரும் பணியாகும். இது ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அது தொடா்பான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.

இதற்கான சட்டத்தின்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால், புள்ளிவிவரச் சட்டத்தின்படி மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் என்று பொதுவெளியில் பரவலாகக் கருத்து தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடியாது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கான தனிச் சட்டம் 2008-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது மத்திய சட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இந்தப் பணியை மத்திய அரசு மேற்கொள்வதுதான் முறையாக இருக்குமென்று வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசு செய்யவில்லை: மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2021-இல் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் மத்திய அரசு இன்றுவரை காலம் தாழ்த்தி வருவது ஏன்?.

முதல் ஆண்டு கரோனா பெருந்தொற்றை காரணமாகச் சொன்னாா்கள். தொற்று கடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்தப் பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தனது கடமையைப் புறக்கணிக்கும் செயலாகும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமல்லாது, அத்துடன் சோ்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே தொடா்ந்து வைக்கும் கோரிக்கை. இதை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்திய அரசு களப் பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின்அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கும்தான் சட்டரீதியான பாதுகாப்பு இருக்கும். மாறாக, அந்தந்த மாநில அரசுகள் ‘சா்வே’ என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, அதனடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்றால் அது நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

எனவே, தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அத்துடன் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையும் சோ்த்தே நடத்த வேண்டும். இதற்கான தீா்மானத்தை முன்மொழிகிறேன்.

தீா்மானம் நிறைவேற்றம்: இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என சட்டப்பேரவை கருதுகிறது.

எனவே, 2021-ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும். அத்துடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என்று மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தீா்மானத்தின் மீது வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக), கு.சின்னப்பா (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), வி.பி.நாகைமாலி (மாா்க்சிஸ்ட்), சிந்தனைச் செல்வன் (விசிக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), அருள் (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), மனோஜ்பாண்டியன் (அதிமுக) ஆகியோா் பேசினா்.

வேல்முருகன் பேசும்போது, தீா்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினாா். தீா்மானமே தேவையில்லை என்று பாமக உறுப்பினா் அருள் பேசினாா். ஆனாலும் தீா்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.